வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia
Last Modified: செவ்வாய், 11 மார்ச் 2014 (09:15 IST)

நாடு முழுதும் சுற்றி உபதேசம் செய்கிறார்.. ஆனால் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல் பேசுகிறார் - ராகுல் காந்தியை மோடி கேலி

காங்கிரஸ் இளவரசர், நாடு முழுவதும் சுற்றிச்சுற்றி போதனையும், உபதேசமும் செய்கிறார். அவர் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல, மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார். அவர் முதலில், மத்திய அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த அரசு, அவரது கட்சியினுடையதா? இல்லையா? என்று விளக்க வேண்டும். என்று மோடி பேசியுள்ளார்.
FILE

பீகார் மாநிலம் புர்னியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசும்போது இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:

மத்திய அரசின் ஊழல் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, விலைவாசி பற்றியோ கேள்வி கேட்டால், அவர் பதில் அளிப்பது இல்லை. அவர் குற்றம் சாட்டுவதோடு சரி, பதிலே அளிப்பது இல்லை.

காங்கிரஸ் இளவரசர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் செல்போனும், கம்ப்யூட்டரும் இலவசமாக அளித்தாக கூறுகிறார். ஆனால், அவற்றை ‘சார்ஜ்’ செய்ய மின்சாரம் கொடுத்தாரா? அவருக்கு இந்தியாவின் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்று கேட்க விரும்புகிறேன்.

தேசிய அளவில், பள்ளிகளில் 22 சதவீத கம்ப்யூட்டர்தான் உள்ளன. ஆனால், நீங்கள் எதற்கெடுத்தாலும் குற்றம் சாட்டும் குஜராத்தில் உள்ள பள்ளிகளில் 71 சதவீத கம்ப்யூட்டர்கள் உள்ளன.

மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், ஏதோ அவர்தான் அறிவுக்கே பிறப்பிடம் போல நினைத்துக்கொள்கிறார். ‘ஆகாஷ்’ டேப்லெட்டுகள் எங்கே போயின என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அதற்கான பணம் எங்கே போனது?

FILE
பீகார் முதலமைச்சர் (நிதிஷ்குமார்), பிரதமர் ஆகும் நினைப்பில் இப்போது சரியாக தூக்கம் வராமல் தவிக்கிறார். அவரது ஆணவம், எவரெஸ்ட் மலைச்சிகரத்தை விட உயர்ந்தது. பிரதமர் பதவிக்கு தன்னைப்போல திறமையானவர் உலகத்திலேயே யாரும் இல்லை என்று அவர் கருதுகிறார்.

3-வது அணி என்பது, முன்னாள் பிரதமர்களையும், பிரதமர் பதவி மீது ஆசை கொண்ட டஜனுக்கு மேற்பட்ட தலைவர்களையும் கொண்டது. அந்த அணியில் உள்ள தலைவர்கள் பலர், பிரதமர் பதவியை ஏற்பதற்காக, உடை எல்லாம் தைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

அவர்கள் தேர்தல் நேர சத்தத்தால் விழித்துக் கொண்டனர். தேர்தல் முடிந்தவுடன், தூங்கப் போய்விட்டு, அடுத்த தேர்தல் வரும்போதுதான் கண் விழிப்பார்கள்.

அவர்கள், பீகாரில் கோசி நதி வெள்ளப்பெருக்கால் மக்கள் மடிந்தபோது வந்தார்களா? கண்ணீர் சிந்தினார்களா?

இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.