செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2016 (15:49 IST)

யார் இந்த ஜோக்கர்? : வசனங்களை வைத்து ஓர் பார்வை

ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜோக்கர் திரைப்படம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வீரியமுள்ள வசனங்கள்தான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வசனங்களும், கேள்விகளும்.
 

 
படத்தில், குத்துப்பாடல்கள் இல்லை. சண்டை இல்லை. துப்பாக்கி சூடுகள், வெடிகுண்டு சப்தங்கள் இல்லை. கொலைக் கருவிகள் இல்லை. அரிவாள், கத்திகள் இல்லை. கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் என எந்த சம்பவமும் இல்லை. ‘ஏய்.. ஓய்..’ என கத்தும் கதாநாயகர்களின் காட்டுக் கத்தல்கள் இல்லை. ஆனாலும், மனதை ரணமாக்கி விடுகிறான் இந்த ஜோக்கர்.
 
மருத்துவமனை கொள்ளை:
 
மருத்துவமனையில் உடல்நலக் குறைவு உள்ள ஒரு நோயாளியை கிருத்தவ மதத்திரனர் பிரார்த்தனை செய்யும் இடத்தில் ஜோக்கர் சொல்கிறார், 'சத்துக்குறைவினால 12 குழந்தைங்க செத்துப் போச்சு. மயக்க மருந்தை மாத்திக் கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போனாங்க. கர்த்தரும் காப்பாத்தலை, மாரியம்மாளும் காப்பத்தலையே'
 
மேலும், ”கக்கூஸ் நாற்றத்துல இருக்குரவனை கர்த்தரா காப்பாற்றுவார். கவர்மென்ட் தான் காப்பாற்றனும்" என்பது சுளீர்.
 
பிரிதொரிடத்தில், உடல்நிலை மோசமான ஒருவரை மருத்துவ ஊழியர், ’இங்கெல்லாம் வைத்தியம் பண்ண முடியாது. அப்பல்லோவுக்கு கொண்டு போங்க’ என்பார்.
 
அதற்கு பொன்னுஞ்சல் கதாபாத்திரம் கேட்பார், “அப்பல்லோவுக்கு எடுத்துட்டுப் போகணும்னா எதுக்கு கவர்மெண்ட்? ஓட்டை எல்லாம் அப்பல்லோவுக்கு குத்தலாமா?” என்பார்.
 
வாழ்வின் வார்த்தைகள்:
 
ஜோக்கர் திரைப்படத்தில் எந்தவித மிகை உணர்ச்சியும் இல்லாமல் காட்டப்படாத கதாபாத்திரத்தில் முக்கியமானவர் பவா செல்லத்துரை.
 

 
’ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒன்னுமே கிடையாதுடா பையா’ என்று காதலில் கசிந்துருகுவதாக இருந்தாலும் சரி, ’கொடுக்கலைன்னா எடுத்துக்கனும்டா பையா’ என்று உரிமைக்குரல் கொடுப்பதாக இருந்தாலும் சரி, ’இந்த நாட்டில் வாழ்வதுதான் கஷ்டம்னு நெனச்சோம். இப்போ பேழ்ரதையும் கஷ்டமா ஆக்கிட்டானுங்களா’ என்று எதார்த்தத்தை சொல்வதாக இருந்தாலும் சரி நிதர்சனமும், ஏக்கமும் நிறைந்த வார்த்தைகள்.
 
எதார்த்தங்கள்:
 
”உழைக்கிறவன் வண்டியதான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?” என்னும் வசனம் அதிகார வர்க்கத்தையும், அதிகார வர்க்கத்திற்கு துணை போகும் காவல் துறையினரையும் கேள்வி கேட்பதாகும்.
 
மேலும், “மேகி-யை‬ தடை பன்னுனா சீனாவுக்கு பிடிக்கல. ‎குளிர்பானத்த‬ தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு பிடிக்கல. ஹெலிகாப்டரா‬ ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட சொன்னா ஆளுங்கட்சிக்கு பிடிக்கல. ‎அரைநாள்‬ உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல” என்னும் வசனங்கள் இன்றைய அரசியல் எதார்த்தை கூறுபோடுவதாகும்.
 
ஒரு கக்கூஸை வைத்துக்கொண்டு ஊழல் செய்த உங்களிடம் நான் நியாயத்தை எதிர்ப்பார்த்தது என் தப்பு தான், நாட்டுக்காக போராடுகிற நாங்க ஜோக்கராயா? எதையும் செய்யாம ஆட்டு மந்த மாதிரி ஓட்ட விற்று வாழும் நீங்க தான்யா ஜோக்கர்’
 
'நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?'
 
புறக்கணிப்புகள்:
 
"கொடுமை என்னன்ன, நாம யாருக்காக போராடரமோ, யாருக்காக சாகிறோமோ, அந்த மக்களே நம்மை காமடியனா பாக்கறது தான்" என பொறுமும் அந்த கடைசி் வசனம் அனைவரது மனசாட்சியையும் உழுக்கி விடுகிறது. சமுதாயத்திற்காக போராடுபவர்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் பட்டத்தின் ஆத்மார்த்தமான பிரதிபலிப்பு இந்த ’ஜோக்கர்’.
 
"தோழர் நாளை போராட்டம்" என முடியும் திரைப்படத்தின் கடைசி காட்சி போராட்ட களத்தின் தொடக்கமாய் நம்முள்ளே ஆட்கொண்டு விடுகிறது.
 
ஜோக்கர் திரைப்படம் இறுதியில் கேள்வியெழுப்பது யார் ஜோக்கர் என்பதுதான்.