1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 13 ஆகஸ்ட் 2016 (17:15 IST)

இயக்குனர் ராஜூமுருகனின் கோபக்கார குழந்தை தான் ஜோக்கர்...!

குக்கூ.. போன்று ஒரு படம் எடுத்தபிறகு இரண்டாவது படவாய்ப்பென்பது எளிதுதான். அப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக இந்த சமூகத்தின் மீது வக்கிரங்களையும், வன்மங்களையும் தூவாமல், மக்களில் ஒருவனாய் நின்று இந்த அரசபயங்கரவாதத்தை கேள்வி கேட்க துணிந்தமைக்காகவே இயக்குனர் ராஜுமுருகன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சகோதரர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
 

 
சிந்திப்பதையே சிதைத்துவிட்டு அகிலமெங்கும் ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கும், அந்த மக்களையும் கூட விட்டுவைக்காமல் புதைத்துக் கொண்டிருக்கும் அரச பயங்கரவாத அரசுகளுக்குமானவன் தான் இயக்குனர் ராஜுமுருகனின் மன்னர் மன்னன் என்னும் ஜோக்கர். யாருக்கும் அஞ்சாமல் சாட்டை சுழற்றியிருக்கிறார். மக்களை மதிக்காத யாரையும் விட்டுவைக்கவில்லை. அதேபோல தன்னால் இயன்றளவு மக்களுக்காக குரல் கொடுக்கவும், பலரையும் அடையாளப்படுத்தி கவுரவிக்கவுமும் செய்திருக்கிறார்.
 
சமகால அரசியல்வாதிகளின் அலட்சியத்தையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், யாருக்காகவும் எதற்காகவும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்து, கேள்வி கேட்கத் தயங்கும் நம்மை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார். தன்னையே ’ஜனாதிபதி’யாக உருவகப்படுத்திக் கொண்டமைக்காக மட்டுமே ஜோக்கர் என்ற தலைப்பு பொருந்துகிறது.
 
அதை தவிர்த்து பார்த்தால் ஜோக்கர் தான் இந்த தேசத்தின் முதன்மையானவன். நாமெல்லாம் தான் ஜோக்கர்கள். படத்தில் பல வசனங்களுக்கு கைதட்டல்கள் காதைக் கிழிக்கிறது. ஆனால் கைதட்டலோடு மறந்துவிடாமல் நாமெல்லாம் சிந்திக்கவேண்டிய அவலங்களை தான் ராஜுமுருகன் வசனங்களாக எழுதியுள்ளார். மக்கள்கள் அனைவரும் ’மன்னர் மன்னன்’ போலவே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டால் இந்த அகிலம் எவ்வளவு அழகானதாக இருக்கும். இந்தியாவும் மக்களுக்கானதாக இருக்கும்.
 
ஒரு பெண் தனது எதிர்கால கணவன் எப்படியிருக்கனும், தான் வாழப்போகும் அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கணும் என்பதை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் இந்த சமூகத்தின் பொதுப் புத்திகளுக்கிடையில், ஒரு பெண் தனது வாழப்போகும் வீட்டில் கழிவறை மட்டுமிருந்தால் போதுமென ஏங்குவதில் இருக்கிறது இந்த தேசத்தின் அலட்சியமும், அவலமும். இதை நக்கலடிக்கவும் முடியாது.
 
சமீபத்தில் வடமாநிலத்தில் ஒரு பெண் கழிவறை இல்லாத காரணத்தால் தனது சொந்த வீட்டிற்கே வாழாமல் சென்ற கதைகளும் நம்மை சுற்றிதான் நடந்துக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ஒரு ஊர்சுற்றி. எந்த ஒரு விசயத்தையும் சிறிதளவு கூட சினிமாத்தனம் இன்றி மக்களோடு மக்களாய் நின்று, அம்மக்களை சுற்றி நடக்கும் சதியையும், ஏமாற்று அரசியலையும், அதே மக்களுக்கு நேர்மையுடன்   சொல்லியிருக்கிறார்.
 
அதுதான் ராஜூமுருகனின் சமூக கோபம். ’மன்னர் மன்னன்’ எனும் ஜோக்கரின் சமூகத்தின் மீதான காதல். ஜோக்கர் இத்தேசத்திற்க்கானவன். கேள்வி கேட்பதையே தீண்டாமையாக நினைத்து வாய்மூடி, கைகட்டி நிற்கும் மக்கள் தான் ஜோக்கர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

நொடிக்கொரு திட்டங்கள் என்று கூவி கூவி இந்த தேசம் (அரசாங்கம்) செய்யும் விளம்பரங்களின் பின்னால் எத்தனை எத்தனை பாமர மக்களின் ரத்தங்களும், உயிர்களும் புதைக்கப்பட்டுள்ளது என்பதை ராஜுமுருகன் அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த தேசத்தின் அதிகார வர்க்கம் தனது அத்துணை சுய நமச்சலுக்கும் பாமர மக்களைதான் சொரிந்துகொள்கிறது. தேவைப்பட்டால் கொல்லவும் செய்கிறது. அவர்களின் திட்டங்களெல்லாம் அவர்களுக்கானதே.
 

 
இதெயெல்லாம் கண்டு சகிக்கமுடியாமல் மக்களுக்கான தேசத்தில், அரசாங்கம் மட்டும் ஏன் மக்களுக்காக இருக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு, கேள்வி கேட்கும் சில மனிதர்களை, இந்த சமூகம் எப்படியெல்லாம் நக்கலடித்து மகிழ்கிறது என்பதையும் மறவாமல் பதிவு செய்துள்ளார். ஆதங்கப்பட்டும் உள்ளார். அந்த காட்சியில் நாமெல்லாம் வெட்கித் தலைகுனிந்தே ஆக வேண்டும்.
 
குழந்தை பிறக்கும் முன்னே சூப்பர் சிங்கருக்காய் பணம் சேர்க்குமளவிற்கு ஊடுருவியுள்ள டிவி மோகங்களை, அரைமணி நேர உண்ணாவிரதத்திற்கு அஞ்சாறு ஏசி கேட்பதை, ஆகாயத்துல போற ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுவதை, நமது பணத்திலிருந்து தரும் இலவசங்களை காரித்துப்புவதில், உழவர் சந்தைகளை அழித்தொழிக்கும் அம்பானிகளை, அம்பானிதானே அவனையும் நோட் பண்ணிட்டேன் என்பதில், பெப்சி கோக்குகளை விஷங்கள் என்று நேரிடையாய் சொல்வதில், மணல் கொள்ளையர்களின் அடாவடிகளை பதிவு செய்ததில், ரோஹித் வெமுலாவை காட்டியதில், ஏன் இதுவரை எந்த ஆடி, பி.எம்.டபிள்யூ கார்களை மட்டும் புடிச்சு நிறுத்துனதேயில்லை என கேட்பதில், சாதி வெறியில் திளைக்கும் தர்மபுரியை களமாக எடுத்து, மக்களுக்கான மாற்று அரசியல் பேசியதில், சீமான்களை நினைவுப்படுதியதில், டெல்லி சாமியை புரோக்கர் சாமியென்ற உண்மையை உணர்தியத்தில், மது ஒழிப்பை குத்தகைக்கு எடுத்தாற்போல் பேசும் கட்சிகளின் மாநாட்டில் மலிந்து கிடக்கும் மதுபாட்டில்களை காட்டியதில், தகப்பனுக்காய் மகள் வாங்கும் குவார்ட்டர் பாட்டிலில் ஒளிந்திருக்கும் அவலத்தில், அரசு மருத்துவமனையில் மத போதகர்கள் பார்க்கும் மருத்துவத்தில் என்று தன் படைப்பு நெடுகிலும் அரசியல் அவலங்களை பேசவும், கேள்வி கேட்கவும் நிச்சயமாக மனசும் வேண்டும். அளவற்ற தைரியமும் வேண்டும்.
 
ஒரு இயக்குனராய் ராஜூமுருகன் வெளுத்தெடுத்து வேட்டையடியிருக்கிறார். அவருடன் அக்கறையோடு உடனிருந்து சிறப்பித்து இருக்கின்றனர் எஸ்.ஆர்.பிரபு சகோதர்கள். வணிகம் தாண்டிய மிகத் தைரியமான முயற்சி தான். வணிக ரீதியாகவும் ஜோக்கர் வெல்வான். வெல்ல வேண்டும். மீறி தோற்றால் அது மக்களின் தோல்வியே.
 
கபாலியில் இரஞ்சித் எழுதிய கோட் வசனத்திற்கு விதண்டாவாதங்கள் செய்த எல்லா சமூக காவலர்களும் இப்போதெங்கே? ஜோக்கரில் இருக்கும் ஒவ்வொவொரு வசனங்களும் இத்தேசத்தின் ஆகச்சிறந்த அவலங்கள், அவமானங்கள் தான். ஆரோக்கியமாய் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் தான் படம் நெடுகிலும் பேசப்பட்டிருக்கிறது.
 
மிக முக்கியமாக, தருமபுரியை தங்களது ஆயுதமாக பயன்படுத்தும் சாதிய அரசியல்வாதிகளுக்கு, அதே தருமபுரியில் வாழும் ஜோக்கர் மூலமாக நிறைய சிகிச்சையளித்துள்ளார். சமூகத்தின் மீது காதல் கொண்ட ஒரு படைப்பாளியாக கேள்வி கேளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார்.
 
அரசியலின்றி அணுவுமில்லை என்பதால் அரசியல் பேச சொல்லி பாடம் நடத்தியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து நிறைய பிரச்சினைகளை பேசியிருக்கிறார். படமாக பார்க்காமல், பாடமாக உள்வாங்கினால் நம்மிலிருந்து ஜோக்கர்கள் பிறப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கு முன் ஜோக்கேர்களை கண்டால் தயவுசெய்து கலாய்க்காமல் காதலியுங்கள். ஜோக்கர் எனும் ’மன்னர் மன்னன்’ மக்களின் மன்னன்.
 
ராஜுமுருகனுக்கு பெரும் பலமாகவும், ஜோக்கருக்கும் நமக்கும் ஒரு பாலமாகவும் செழியனின் விழிப்பதிவு பெரும் பங்களிப்பாற்றுகிறது. கலை இயக்குநரின் உழைப்பு அளப்பறியது. இந்த சமூகத்தின் மீது அக்கறைப்பட்ட படக்குழுவினரின் உழைப்பு அசாத்தியமானது. படம் நெடுகிலும் அவர்களும் நம்முடனே பயணிக்கின்றனர். மக்களுக்காய் உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகளும், நன்றிகளும்.
 
அவர்களை மகிழ்விக்க நமக்கிருக்கும் ஒரே வழி நாம் விரைவில் தியேட்டரில் போய் படம் பார்ப்பது தான். ஏனென்றால் நல்ல படங்களை விரைவில் பெட்டிக்குள் அனுப்பும் நல்லோர்கள் மலிந்துகிடக்கும் தேசமிது.
 
வரவிருக்கும் சுதந்திர தினத்திற்கு என்ன பேச வேண்டும் என்று தேசப் பிரதமர் மக்களை கேட்கிறார். அதே தேசத்தில் வாழவழியற்ற ஜோக்கர், தான் வாழும் அமைப்பையை கேள்வி கேட்கிறான் எப்படி வாழ்வேனென்று? ஆனால், இதுவா சனநாயக தேசம்? மக்களுக்கான தேசம்?
 
ஜெபி.தென்பாதியான்.