இயக்குனர் ராஜூமுருகனின் கோபக்கார குழந்தை தான் ஜோக்கர்...!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 13 ஆகஸ்ட் 2016 (17:15 IST)
குக்கூ.. போன்று ஒரு படம் எடுத்தபிறகு இரண்டாவது படவாய்ப்பென்பது எளிதுதான். அப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக இந்த சமூகத்தின் மீது வக்கிரங்களையும், வன்மங்களையும் தூவாமல், மக்களில் ஒருவனாய் நின்று இந்த அரசபயங்கரவாதத்தை கேள்வி கேட்க துணிந்தமைக்காகவே இயக்குனர் ராஜுமுருகன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சகோதரர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
 
 
சிந்திப்பதையே சிதைத்துவிட்டு அகிலமெங்கும் ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கும், அந்த மக்களையும் கூட விட்டுவைக்காமல் புதைத்துக் கொண்டிருக்கும் அரச பயங்கரவாத அரசுகளுக்குமானவன் தான் இயக்குனர் ராஜுமுருகனின் மன்னர் மன்னன் என்னும் ஜோக்கர். யாருக்கும் அஞ்சாமல் சாட்டை சுழற்றியிருக்கிறார். மக்களை மதிக்காத யாரையும் விட்டுவைக்கவில்லை. அதேபோல தன்னால் இயன்றளவு மக்களுக்காக குரல் கொடுக்கவும், பலரையும் அடையாளப்படுத்தி கவுரவிக்கவுமும் செய்திருக்கிறார்.
 
சமகால அரசியல்வாதிகளின் அலட்சியத்தையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், யாருக்காகவும் எதற்காகவும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்து, கேள்வி கேட்கத் தயங்கும் நம்மை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார். தன்னையே ’ஜனாதிபதி’யாக உருவகப்படுத்திக் கொண்டமைக்காக மட்டுமே ஜோக்கர் என்ற தலைப்பு பொருந்துகிறது.
 
அதை தவிர்த்து பார்த்தால் ஜோக்கர் தான் இந்த தேசத்தின் முதன்மையானவன். நாமெல்லாம் தான் ஜோக்கர்கள். படத்தில் பல வசனங்களுக்கு கைதட்டல்கள் காதைக் கிழிக்கிறது. ஆனால் கைதட்டலோடு மறந்துவிடாமல் நாமெல்லாம் சிந்திக்கவேண்டிய அவலங்களை தான் ராஜுமுருகன் வசனங்களாக எழுதியுள்ளார். மக்கள்கள் அனைவரும் ’மன்னர் மன்னன்’ போலவே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டால் இந்த அகிலம் எவ்வளவு அழகானதாக இருக்கும். இந்தியாவும் மக்களுக்கானதாக இருக்கும்.
 
ஒரு பெண் தனது எதிர்கால கணவன் எப்படியிருக்கனும், தான் வாழப்போகும் அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கணும் என்பதை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் இந்த சமூகத்தின் பொதுப் புத்திகளுக்கிடையில், ஒரு பெண் தனது வாழப்போகும் வீட்டில் கழிவறை மட்டுமிருந்தால் போதுமென ஏங்குவதில் இருக்கிறது இந்த தேசத்தின் அலட்சியமும், அவலமும். இதை நக்கலடிக்கவும் முடியாது.
 
சமீபத்தில் வடமாநிலத்தில் ஒரு பெண் கழிவறை இல்லாத காரணத்தால் தனது சொந்த வீட்டிற்கே வாழாமல் சென்ற கதைகளும் நம்மை சுற்றிதான் நடந்துக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ஒரு ஊர்சுற்றி. எந்த ஒரு விசயத்தையும் சிறிதளவு கூட சினிமாத்தனம் இன்றி மக்களோடு மக்களாய் நின்று, அம்மக்களை சுற்றி நடக்கும் சதியையும், ஏமாற்று அரசியலையும், அதே மக்களுக்கு நேர்மையுடன்   சொல்லியிருக்கிறார்.
 
அதுதான் ராஜூமுருகனின் சமூக கோபம். ’மன்னர் மன்னன்’ எனும் ஜோக்கரின் சமூகத்தின் மீதான காதல். ஜோக்கர் இத்தேசத்திற்க்கானவன். கேள்வி கேட்பதையே தீண்டாமையாக நினைத்து வாய்மூடி, கைகட்டி நிற்கும் மக்கள் தான் ஜோக்கர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...


இதில் மேலும் படிக்கவும் :