1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Ashok
Last Updated : சனி, 3 அக்டோபர் 2015 (13:15 IST)

புலி திரைப்படம் ஒரு அலசல்

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன்  நடிப்பில் வெளியான புலி படத்தின் விமர்சனத்தை இப்பொழுது பார்ப்போம். 


 


1. வேதாளக்கோட்டை என்ற பேண்டஸி நகரின் ராணி ஸ்ரீதேவி. அவரது தளபதி, சுதீப். இவர்தான் வில்லன்.

2. வேதாளக் கோட்டையில் உள்ளவர்கள் அதிசய மூலிகை ஒன்றை சாப்பிட்டு அதிக சக்திவாய்ந்தவர்களாக  இருக்கிறார்கள். வேதாளங்கள் என அழைக்கப்படும் இவர்களை அடிமையாக்கி நாட்டு மக்களை அதிக வரி  செலுத்த வைத்து கெடுமைப்படுத்துகிறார் சுதீப்.

3. சுதீப்பின் கொடுமைகளை ராணியிடம் முறையிடச் செல்லும் பிரபு, ராணி வேடம் அணிந்திருக்கும்                  சுதீப்பிடம் அவரைக் குறித்தே குறை சொல்ல, பிரபுவின் கையை வெட்டிவிடுகிறார் சுதீப்.

4. ஆற்றில் வெள்ளத்தோடு அடித்து வந்த குழந்தையை பிரபு வளர்க்கிறார். அவர்தான் விஜய்.

5. சிறுவயதில் ஒன்றாக வளரும் விஜய்யும், ஸ்ருதியும் வளர்ந்தபின் காதலிக்கிறார்கள்.

6. வேதாளங்கள் ஒருமுறை ஊருக்குள் புகுந்து பிரபுவை கொன்று, ஸ்ருதியை கடத்திவிடுகிறார்கள்.

7. காப்பாற்ற கிளம்பும் விஜய் வழியில் பல பிரமாண்ட பிரச்சனைகளை சந்திக்கிறார். அவற்றை முறியடித்து வேதாளக் கோட்டையை அடைகிறார்.

8. விஜய் யார் என்பதற்கு படத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. நீண்ட தலைமுடியுடன் இரண்டாம் பாகத்தில் வரும் விஜய்க்கு விசில் பறக்கிறது.

9. முதல் பாதியில் மூன்று பாடல்கள். வழக்கம்போல அதிரடியாக ஆடியிருக்கிறார் விஜய். ஜிங்கிலியா பாடலில் குள்ள விஜய்யாக வருகிறார்.

10. ஸ்ருதியின் காஸ்ட்யூம் இளைஞர்களை கள்வெறி கொள்ள வைக்கும். ஹன்சிகா இளரவசி.

11. கிராமத்து மருத்துவர் தரும் மூலிகையை வைத்து விஜய், வேதாளங்களில் ஒருவராக நடிப்பதும், அவர் வேதாளம்தானா என்று சுதீப் சோதிப்பதும் சிறப்பான காட்சிகள்.

12. படத்தில் அனைவரையும் ஈர்ப்பது சுதீப், ஸ்ரீதேவியின் மிரட்டல் நடிப்பு. இரண்டு பேரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதேவியின் மேக்கப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

13. படத்தின் சிறப்பு, படம்நெடுக இழையோடும் நகைச்சுவை. அடுத்து கிராபிக்ஸ். நம்ப முடியாத விஷயங்களை வைத்து ஒரு படத்தை தருவது சவால்தான். அதில் சிம்புதேவன் வெற்றி பெற்றிருக்கிறார். என்றாலும், விஜய் போன்ற நடிகரை வைத்து பிரமாண்டமாக ஒரு படத்தை எடுக்கையில் திரைக்கதைக்கு இன்னும்கூட மெனக்கெட்டிருக்கலாம்.

14. ஏண்டி ஏண்டி அருமையான பாடல். அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால், பின்னணி இசையில் பெரிய அளவில் கோட்டைவிட்டிருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். புலி புலி பாடலுக்கு தியேட்டர் கிழிகிறது, அவ்வளவு விசில்.

15. கலை இயக்குனர் முத்துராஜும், ஒளிப்பதிவாளர் நட்டியும் இணைந்து ஒரு மாயஜால உலகை படைத்திருக்கிறார்கள். சிற்சில குறைகள் இருந்தாலும், குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

16. தம்பி ராமையா, சத்யன் போன்றவர்களுடன் விஜய் கிராமத்தில் அடிக்கும் கொட்டம் ரசிக்க வைக்கிறது.

17. திரைக்கதையில் இருக்கும் தொய்வும், கலை இயக்கத்தில் ஆங்காங்கு காணப்படும் செயற்கைத்தனமும், சில இடங்களில் கிராபிக்ஸ் நிஜமாக இல்லாமல் கிராபிக்ஸnகவே தெரிவதும் புலியின் குறைகள்.

18. ஃபேண்டஸி கதை என்பதால் உணர்வுப்பூர்வமான நெருக்கம் படத்துடன் ஏற்படவில்லை.

19. இந்த குறைகளை நகைச்சுவை, பிரமாண்டம் போன்ற நிறைகளால் நன்றாகவே மறைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இரண்டரை மணிநேர குதூகலத்துக்கு புலி உத்தரவாதமளிக்கிறது..