செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (13:36 IST)

ஓ காதல் கண்மணி விமர்சனம்

மணிரத்னம் இஸ் பேக். பதினைந்து வருடங்களுக்குமுன் பரவசப்பட்ட அதே அலைபாயுதே அனுபவம். இளமை உலகின் அரிச்சுவடி மணிரத்னத்திடம் மட்டும் எப்படி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறதோ என்று ஒவ்வொரு ப்ரேமிலும் ஆச்சரியப்பட வைக்கிறார். படம் நெடுக பொங்கி வழியும் இளமை.

அனிமேஷன் படித்து அமெரிக்காவில் செட்டிலாக துடிக்கும், டிபிகல் 21 -ஆம் நூற்றாண்டு தமிழ் இளைஞன் துல்கர். பெரிய ஆர்க்கிடெக்காகி பாரிஸில் குடியேற விரும்பும் நித்யா மேனன். இந்த அமெரிக்கக் கனவும் பாரிஸ் கனவும் மும்பையில் சந்தித்து, கல்யாணம் கண்டிப்பாக பண்ணிக்கிறதில்லை என்ற கண்டிஷனுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். லிவிங் டுகெதருடன் அவர்களின் உறவு முடிந்தா? இல்லை கல்யாணம் என்ற கலாச்சாரத்தில் சங்கமித்ததா?
 
இன்றை இளைஞர்களின் உலகை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் துல்கர் சல்மானும், நித்யா மேனனும். மணிரத்னத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் இளமை உற்சாகம். திருமணத்தின் போது பரஸ்பரம் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சி போல் படம் நெடுக இனிப்பு தூவல்கள்.
 
இளமை உற்சவத்துக்கு இணையாக பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் தம்பதி. வீடு இல்லை என்று சொல்லும் பிரகாஷ்ராஜை, அவரது மனைவி லீலா சாம்சனுக்கு சங்கீதம் பிடிக்கும் என்ற வீக்னஸை வைத்து நித்யா மேனன் வீழ்த்தும் இடம் அசத்தல். கட்டிலையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ளும் துல்கருக்கு ஒரு கட்டத்தில் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பாரோ என்ற சந்தேகம். சந்தேகம் தீர்கிறபோது சிரிப்பில் நிறைகிறது தியேட்டர்.
 
படத்தில் பல ஹீரோக்கள். பி.சி.ஸ்ரீராமும், ரஹ்மானும் அதில் இருவர். மணிரத்னத்தின் எண்ணவோட்டங்களுக்கு முன்னவர் வண்ணமும், பின்னவர் சத்தமும் தந்திருக்கிறhர். இன்னொரு ஹீரோ எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.
 
லிவிங் டுகெதர் என்ற புதிய கலாச்சாரத்தை, முதிர்ந்த பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் தம்பதியின் காதலை வைத்து கேள்விக்குட்படுத்தி, படத்தின் முடிவில் கலாச்சாரத்தை காப்பாற்றி கல்லெறியிலிருந்து தப்பித்துள்ளார். 
 
சுதந்திரம் என்பது முடிவின்மை. முடிவின்மையை கண்டு மனிதன் எப்போதும் பயப்படுகிறான். கடவுள் என்பது வரையறுக்க முடியாத முடிவின்மை. அதனால் அந்த பிம்பத்தின் மீது அவனுக்கு பயம், மரியாதை. அதேபோல்தான் சுதந்திரமும். மனிதன் அடிமைத்தனத்தைவிட சுதந்திரத்தை கண்டே அதிகம் பயப்படுகிறான். அதனை எப்படி கையாள்வது என்று அவனுக்கு பயம். கட்டுப்பாடுகள் இல்லாத லிவிங் டுகெதரை விடுத்து, கட்டுப்பாடுகள் நிறைந்த கல்யாணத்தை அதனால்தான் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்கிறார்கள். 
 
பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன் போன்ற கோடியில் ஒரு தம்பதியை வைத்து கல்யாணத்தை நியாயப்படுத்தியது கிளைமாக்ஸ் சறுக்கல். ஆனால் பெரும்பாலானவர்கள் அதைத்தானே விரும்புகிறர்கள்?