வெள்ளி, 3 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By BALA
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2026 (11:22 IST)

kalidas 2: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?- காளிதாஸ் 2 விமர்சனம்

kalidas 2: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?- காளிதாஸ் 2  விமர்சனம்
2019-ல் வெளியாகி மிரட்டிய 'காளிதாஸ்' படத்தின் தொடர்ச்சியாக, மீண்டும் ஒரு திகில் பயணத்திற்கு நம்மை அழைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த 'காளிதாஸ் 2' திரையரங்குகளில் இன்று களமிறங்கியுள்ளது. எதிர்பார்ப்புகளின் மத்தியில்  வந்திருக்கும் பரத்தின் போலீஸ் அவதாரம் மீண்டும் மேஜிக் செய்ததா? வாருங்கள் பார்ப்போம்.

ஒரு பிரம்மாண்ட அபார்ட்மெண்ட். அங்கே ஒரு சூட்கேஸில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்படும் சிறுமியின் சடலம். இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியைத் தேடி களம் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ். ஒருபுறம் அஜய் கார்த்திதான் கொலையாளி என அடித்துச் சொல்லி விசாரணையை ஒரு பக்கம் திருப்புகிறார் பவானி ஸ்ரீ.  காளிதாஸின் விசாரணை சூடுபிடிக்கும் வேளையிலேயே, அதே குடியிருப்பில் அடுத்தடுத்து அரங்கேறும் மரணங்கள் அதிர வைக்கின்றன. நிஜமான குற்றவாளி யார்? காளிதாஸின் வேட்டை எதை நோக்கி முடிகிறது என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
 
 
மாஸ் ஹீரோவுக்கான எந்த ஒரு பில்டப்பும், மிகைப்படுத்தலும் இல்லாமல், வலிகளும் அழுத்தங்களும் நிறைந்த ஒரு நிஜமான காவல்துறை அதிகாரியாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார் பரத். அலட்டிக்கொள்ளாத அவரது உடல்மொழி படத்திற்குப் பெரிய ப்ளஸ். சொல்லப்போனால் அவருக்கு இது ஒரு ஸ்ட்ராங்கான 'கம்-பேக்' திரைப்படம்.
 
கதையின் போக்கை மாற்றுபவராக பவானி ஸ்ரீ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதுமுகம் அஜய் கார்த்தி தனது கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சங்கீதா, தனது முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கிஷோரும், பிரகாஷ் ராஜும் தங்களின் கேமியோ மூலம் திரையை ஆக்கிரமிக்கிறார்கள்.
 
தேவையற்ற ரொமான்ஸ், பாடல்கள் என எந்த கமர்ஷியல் சமரசமும் இல்லாமல் நேராக கதைக்குச் சென்றதற்காகவே இயக்குநர் ஸ்ரீ செந்திலைப் பாராட்டலாம். படத்தின் இரண்டாம் பாதி பந்தயக் குதிரையாக சீறிப் பாய்கிறது. முதல் பாதியிலும் அதே வேகத்தை மெயின்டெயின் செய்திருந்தால் படம் இன்னும் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருக்கும். இருப்பினும், யாரும் கணிக்க முடியாத அந்த 'க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்' நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
 
த்ரில்லர் படங்களுக்கே உரிய பதற்றத்தை படம் முழுவதும் கடத்துவதில் சாம் சி.எஸ்ஸின் மிரட்டலான பின்னணி இசை பெரும் வெற்றி பெற்றுள்ளது.
 
முதல் பாகத்தின் தரத்தை சற்றும் குறைக்காமல், நேர்த்தியாகப் பின்னப்பட்ட ஒரு தரமான க்ரைம் த்ரில்லராக வந்திருக்கிறது 'காளிதாஸ் 2'. லாஜிக் மீறல்கள் இல்லாத, யூகிக்க முடியாத ஒரு த்ரில்லர் படத்தைப் பார்க்க நினைப்பவர்கள் தாராளமாகத் திரையரங்குகளுக்குச் செல்லலாம்!