1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. blue sattai maran reviewd gatta kusthi 2 movie

கட்டா குஸ்தி 2 - பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

கட்டா குஸ்தி 2
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் விமர்சனத்தை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.  
புளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில்  வழக்கமாகத் தமிழ் சினிமாவில் முதல் பாகம் ஹிட்டாகிவிட்டால், இரண்டாம் பாகத்தில் ஏனோ தானோ என்று கதையை எழுதி கல்லா கட்டப் பார்ப்பார்கள். இந்தப் படமும் அப்படி நம்மைச் சாவடிக்கப் போகிறதோ என்ற பயத்துடன்தான் தியேட்டருக்குச் சென்றேன். ஆனால், முதல் பாகத்தோடு கச்சிதமாகத் தொடர்புபடுத்தி, ஒரு நேர்த்தியான கதையை இயக்குநர் கொடுத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
 
முதல் பாகத்தில் மல்யுத்த வீராங்கனையான நாயகிக்கும், ஹீரோவுக்கும் திருமணம் நடந்து, பின் ஈகோவினால் பிரிந்து இணைவார்கள். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.
 
நாயகி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வேயில் வேலை பார்க்க, ஹீரோ வீட்டிலிருந்தபடியே குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார். இதனால் ஊரே கிண்டல் செய்தாலும் ஹீரோ அதைப் பொருட்படுத்துவதில்லை. ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக இருவருக்குள்ளும் மீண்டும் பிளவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே இந்த ஸ்போர்ட்ஸ் & ஃபேமிலி டிராமா. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. அவை ரசிகர்களிடம் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளன.
 
படத்தில் நல்ல திரைக்கதை அமைந்திருந்தாலும், சில முக்கிய காட்சிகளை இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம். குறிப்பாக, பள்ளிக்கூடத்தில் ஹீரோ ரவுடிகளை அடிக்கும் சண்டைக் காட்சியில் இன்னும் மாஸாக ஸ்கோர் செய்திருக்கலாம்.
 
முதல் பாகத்தின் கிளைமாக்ஸை நம்மால் எளிதில் யூகிக்க முடியாது. ஆனால், பார்ட் 2-ன் கதையைச் சுலபமாக யூகிக்க முடிகிறது. இருப்பினும் படத்தின் முடிவு திருப்திகரமாக உள்ளது. பெரிதாக லாஜிக் பார்க்காமல், வீக் எண்டில் குடும்பத்தோடு ஜாலியாகப் பார்க்க வேண்டிய படம் இது. தியேட்டரில் அங்கங்கே நல்ல காமெடி இருக்கிறது, பெரிதாகப் போரடிக்கவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். ஆண்களுக்கும் பெரிய அளவில் சேதாரம் எதுவும் இருக்காது. சுருக்கமாகச் சொன்னால், கட்டா குஸ்தி 2 நிச்சயமாக மோசம் இல்லாத ஒரு நல்ல படம்  என்று அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
பாலகிருஷ்ணன்