போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம், இந்திய பங்குச் சந்தையில் இன்று மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,720 புள்ளிகளுக்கும் மேலாக எகிறியது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23,900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 13.6 சதவீதம் சரிந்து, பேரலுக்கு 94.42 டாலராகக் குறைந்ததே இந்த அதிரடி உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது உலகளாவிய எரிசக்தி விநியோக தடையை நீக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜப்பான் மற்றும் தென் கொரிய சந்தைகளும் 5 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. இந்திய சந்தையில் ரியால்டி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் அபார வளர்ச்சி கண்டுள்ளன.
இதற்கிடையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளதால், வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவுகள் சந்தையின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva