1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex and Nifty Surge Amid US-Iran Peace Treaty and Crude Oil Price Drop

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி... இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!

பங்குச் சந்தை
உலகளாவிய சாதகமான சூழல்களால் இந்திய பங்குச்சந்தை இன்று அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளது. அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் மற்றும் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் சரிந்து பீப்பாய் 82.90 டாலராக குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 736.38 புள்ளிகள் உயர்ந்து 76,264.33 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 23,853.90 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.
 
பங்குச்சந்தையில் சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளை தவிர மற்ற அனைத்து முக்கிய குறியீடுகளும் லாபத்துடன் முடிந்தன. குறிப்பாக, நிஃப்டி ரியாலிட்டி குறியீடு 4 சதவீதம் வரை உயர்ந்தது. லார்சன் & டூப்ரோ நிறுவன பங்குகள் 3.2 சதவீதம் ஏற்றம் கண்டன. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விமான நிறுவனங்கள், டயர் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. சென்செக்ஸில் ட்ரெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி ஆகிய பங்குகளும், நிஃப்டியில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி லைஃப் பங்குகளும் லாபம் ஈட்டின.
 
மறுபுறம் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹிண்டால்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஆசிய சந்தைகளான தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கெய் குறியீடுகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் வரை உயர்ந்ததும் இந்திய சந்தையின் இந்த எழுச்சிக்குக் கைகொடுத்தது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்!. பாட்டிலுக்கு 10 ரூபா சிக்கலுக்கு தீர்வு!..