ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதி கொள்கை குழு இன்று நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6 முதல் 8 வரை நடைபெற்ற மூன்று நாள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இன்று காலை 10 மணிக்கு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் சூழலால் ஏற்பட்டுள்ள பணவீக்க அழுத்தத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த நிதானமான முடிவை எடுத்துள்ளது.
கடந்த 2025 பிப்ரவரி முதல் இதுவரை ஒட்டுமொத்தமாக 125 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த மூன்று கூட்டங்களாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் தற்போதைய நிலையையே தொடர்ந்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்கவும், அதே நேரத்தில் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவும் இந்த அணுகுமுறை அவசியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்ததையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று 3 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து காணப்படுகின்றன. சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
Edited by Siva