வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva

படுகுழியில் விழுந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் சரிவு..!

படுகுழியில் விழுந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் சரிவு..!
இன்று  அதாவது மார்ச் 9ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை ஒரு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்திலேயே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 2 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன. நிஃப்டி 592 புள்ளிகள் சரிந்து 23,858 என்ற அளவிலும், சென்செக்ஸ் 1864 புள்ளிகள் சரிந்து 77,054 என்ற அளவிலும் வர்த்தகமானது.
 
இந்த திடீர் வீழ்ச்சிக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலரைத் தாண்டியுள்ளது. 
 
இது இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, பணவீக்கத்தை உருவாக்கும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
 
பங்குச்சந்தை சரிந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் MCX சந்தையில் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 1.57% உயர்ந்துள்ளன. அதே சமயம், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 93.98 ஆக குறைந்து வரலாற்று சரிவை சந்தித்துள்ளது. வங்கி, ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை பங்குகள் இன்று கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
 
சர்வதேச அளவில் நிலவும் இந்த போர்ச்சூழல் முடிவுக்கு வராத வரை, பங்குச்சந்தையில் இத்தகைய ஊசலாட்டம் நீடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதலீட்டாளர்கள் இப்போதைக்கு அவசரப்பட்டு முதலீடு செய்வதை தவிர்த்து, சந்தை நிலைபெறும் வரை காத்திருப்பது நல்லது.
 
 
Edited by Siva