செவ்வாய், 19 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. காதல் தேசம்
  4. »
  5. டிப்ஸ்
Written By Webdunia

காதல் போலியானதா?

காதல்... இந்த மூன்றெழுத்தை உணராதவர்கள் இருக்க முடியாது.

பதின்ம வயதிலோ அல்லது விடலைப் பருவத்திலோ அல்லது வேலைக்குச் சேர்ந்து விவரம் அறிந்தோ காதலில் விழாதவர்களே இல்லை எனலாம்.

எந்த வயதினர் அல்லது எந்த வயதில் காதலில் விழுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லாக் காதலும் ஜெயிக்கிறதா?

இந்தக் கேள்விக்கு எத்தனை விழுக்காட்டினர் உறுதியுடன் ஆம், ஜெயிக்கிறது என்று பதில் கூறுவர் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வையும், பத்திரிகைகளில் வெளியான சில செய்திகளையும் இங்கு தொகுத்துள்ளோம்.

கல்லூரியில் கணினி படிப்பை முடித்து நல்லதொரு தனியார் நிறுவன வேலையில் இருக்கும் இளம்பெண். அவரது இரு தங்கைகளில் ஒருவர் இன்னொரு தனியார் நிறுவனத்தில் பணி. சிறிய தங்கை 10ஆம் வகுப்பு படிக்கிறார்.

தந்தைக்கு சொந்த தொழில் என்றாலும், பெரிதாக நிரந்தர வருவாய் இல்லை. 25 வயதான நிலையிலும், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தந்தைக்கு கிஞ்சிற்றும் இல்லை (மகளின் வருமானம் போய் விடுமே என்ற எண்ணம்தான்). தாய், வீட்டு நிர்வாகி. பெரிதாகப் படிக்கவில்லை.

சில ஆண்டுகள் பொறுத்துப் பார்த்த அப்பெண், வீட்டிற்கு அருகாமையில் உள்ள வேறு பிரிவைச் சேர்ந்த ஒழுக்கமான ஒருவரைத் தேர்வு செய்தாள். 2,3 ஆண்டுகள் காதலித்த அப்பெண், குடும்பத்தின் நிலையை ஓரளவுக்கு உயர்த்தி விட்ட பின், முறைப்படி பெண் கேட்க வருமாறு கூறி, பையன் வீட்டாரும் வந்து கேட்க வீட்டில் மறுப்பு.

``முடிந்தால் சம்மதம் தாருங்கள். அல்லது நாங்களே திருமணம் செய்து கொள்வோம்'' என்று அந்தப் பெண் கூறிவிட, வேறு வழியில்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. சீரியஸான காதல் இது. சபாஷ் சொல்லலாம்.

இது மாதிரியான சமயோசிதமான, திட்டமிட்ட துணிச்சல் எத்தனை பெண்களுக்கு வரும்? அல்லது எத்தனை ஆண்கள், பெண் கொடுத்தால் போதும். தான் காதலித்தது அந்தப் பெண்ணை மட்டும்தான். பொன்-ஐ (நகை) அல்ல என்று நினைக்கிறார்கள்? என்பதெல்லாம் மிகப்பெரிய விவாதம்.

வேறு சில ஜாலியான காதல் பலவற்றை பார்க்கிறோம். `நீ இல்லாவிட்டால், நான் இல்லை', `உயிரைக் கொடுத்தும் உன்னை மீட்பேன்' என்றெல்லாம் பல வீர வசனக் காதலையும், காதலர்களையும் கேள்விப்படுகிறோம்.

பெண் காதலிப்பதை அறிந்த பெற்றோர், ரகசியமாக வேறு மாப்பிள்ளை பார்த்து, பெண்ணுக்கே தெரியாமல் அவசரமாக சொந்த ஊருக்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ அழைத்துச் சென்று திருமணம் முடித்து வைத்து விடுவதுண்டு. காதல‌ர் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ தேவதாஸ் போல தாடி விட்டுக் கொண்டு திரிந்த பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதுண்டு.

அல்லது காதலர்கள் இருவருமே, `எதற்கு நம் இருவரது வீட்டையும் பகைத்துக் கொண்டு திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும். இருவருமே சமரசமாகப் பிரிந்து விடலாமே' என்று பேசி அந்தப் பெண் வேறு ஒருவரையும், காதலன் வேறொரு பெண்ணையும் திருமணம் முடித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் தியாகம் (!?) செய்து கொள்வதும் உண்டு. ``நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக அமையட்டும்'' என்று ஞானிகள் போல் பேசி சமாளித்து விடுவார்கள்.

அல்லது ஊர் சுற்றும் வரை சினிமா, பீச், ஹோட்டல் என்று சென்று விட்டு, திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டவுடன், `அதற்கு வேறு ஆளைப் பார். உன்னுடன் நண்பனாகவே நான் பழகினேன்' என்று கூறும் பெண்களையும் கேள்விப்படுகிறோம். பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறேன் என்ற ஆசை வார்த்தை கூறி, சில மாதங்கள், ஆண்டுகள் பழகி விட்டு, முடிந்தவரை அனுபவித்து விட்டு கழற்றி விடும் ஆண்களையும் பார்க்கிறோம்.

இதுபோன்ற பல சம்பவங்களைக் கூறி, காதலர்களின் உறுதியை நாம் குலைக்கவில்லை. காதலியுங்கள். உங்கள் நிலைமை, தகுதி, இலட்சியம் போன்ற பல கூறுகளை ஆய்வு செய்த பிறகே தெளிவான முடிவெடுங்கள்.

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? உங்கள் பணி, குடும்ப பொருளாதார நிலை, ஆண் - பெண் இருவரது வீட்டிலும் இருவருக்கும் உள்ள பொறுப்பு, கடமைகளை நிறைவேற்றிய பின் வீட்டில் சம்மதம் பெறப் பாருங்கள்.

முடியாதபட்சத்தில், இரு வீட்டாருக்கும் சொல்லிவிட்டு, முடிந்தால், அருகில் உள்ள காவல்நிலையத்திலும் உங்களது நிலைமையை விளக்கிக் கூறி, குறிப்பிட்ட தேதியில் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பதே இதன் மூலம் நாம் தெரிவிக்கும் தகவல்.

காதலைப் போலியாக்காதீர்கள்! போலியில் முடியும் என்று தெரிந்தால் காதலிக்காதீர்கள்!!