அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

Webdunia|
முன்பிறவி நியாபங்கள் மட்டுமே மூளைக்குள் பதிவாகியிருந்தது. மூளையும் மனதும் வேறுவேறோ... தான்தான் சாரதிப் பித்தன் என்று பூரணமாக அறிந்துகொண்டானே தவிர, அந்த கவிஞனின் ஆன்மா, சிவாவிடம் இல்லை. அப்போதைய சாரதிப் பித்தனின் மன ஓட்டம், இப்போதைய சிவாவிடம் துளியும் இல்லை. சிவா சிந்திப்பது சிவா ஊடாகவே. சாரதிப் பித்தனின் வாழ்க்கை மட்டுமே சிவாவின் மனதிலே முழுமையாக பதிவாகியிருந்தது.

சாரதிப் பித்தனின் வாழ்க்கையை ஒரு சிறு குறிப்பாய் நினைவலையில் சுழற்றிப் பார்த்தான், சிவா...

கண்ணால் காண்பதை மனதால் உள்வாங்கிக் கொண்டு, அதை வார்த்தைகளால் சுவைபட வெளிப்படுத்தும் கவிஞன். நிகழ்காலம் மட்டுமின்றி, எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தனது கற்பனைத் திறனால் முன்கூட்டியே கணித்துக் கூறிய ஆருடன். எப்படியெல்லாம் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று பகுத்துக் கொடுத்த பகுத்தறிவாளன், வாழ்க்கையைப் பகுத்தறிந்தாலும், அதிலுள்ள ஆன்மிகக் கூறுகளை எடுத்துரைத்தவன்... சாரதிப் பித்தன்.
திருச்சி நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக காலம் கழித்த தந்தை ராஜகோபாலன். ஆடவர்களின் கால்களை மட்டுமே பார்த்துப் பேசும் தாயார் தனலட்சுமி. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என படித்து கணக்காளனாக முன்னேறிய ராமசாமி அண்ணன்... சொந்தங்களும் பந்தங்களும் நான்கு கைகளால் மட்டுமே எண்ணிவிடக்கூடியவை.
ஆனால், சாரதிப் பித்தனின் உலகம் பெரியது. இதை உணர்ந்தவள், பி.யு.சி. வரை படித்த மரகதம். சாரதிப் பித்தனின் முதல் வாசகி, முதல் சினேகிதி, முதல் மற்றும் கடைசி காதலி.
தந்தை 'உதவாக்கரை' அழைத்த போதெல்லாம், மரகதம் ஆறுதல் சொல்லாவிட்டால் கவிதைகளைப் பெற்றெடுக்காமல் விட்டுவிட்டிருப்பான், சாரதிப் பித்தன்.

விடுதலைக்கு பாடுபட்ட, அதிகம் பரிட்சயம் இல்லாத சாரதி என்ற கவிஞனின் மீதான பற்றால், சாரதிப் பித்தனானான், கோவிந்தன்.
மரகதம் மீது சினேகம் வந்தபோது, மரகதன் ஆகிவிடலாமா என யோசித்தான். ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மரகதத்தை சாரதி வென்றுவிட்டதால், சாரதிப் பித்தனாகவே நீடித்தான்.

படைப்புகள் பரணுக்குச் செல்லத் தொடங்கின. பணம் பண்ணத் தெரியததால் பெற்றோர்களும் பிரியத் தொடங்கினர். அப்போதும், அருகில் இருந்து ஆராதித்தவள்தான் மரகதம்.
கவிதைத் தொழிலை விட்டுவிட்டு, மரகதத்தை அழைத்துக் கொண்டு பட்டணம் சென்று புதுக்குடித்தனம் தொடங்கலாம் என்ற நினைத்த கணத்திலேயே காலன் எதிரே வந்துவிட்டான். கடைவீதியில் நெஞ்சில் முட்டியது காளை..!

பரணில் கிடந்த படைப்புகள் எப்படி பாருக்கு வந்தது? கவிதை என்ற பெயரில் ஆரம்பத்தில் கிறுக்கியவை கூட, பாடப் புத்தகத்திலே பதிவாகியிருக்கிறதே? என் பெற்றோர்கள் மாண்டிருப்பார்களா? அதாவது நான் சாரதிப் பித்தனாக இருந்தபோது என்னை பெற்றவர்களாக இருந்தவர்கள். இல்லை, அவர்களைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும்? பணம் சம்பாதித்த அண்ணன் மட்டும் பிள்ளை என்று சென்றவர்களாயிற்றே அவர்கள். சாரதிப் பித்தனின் மரகதம்? ஆம், அவள் என்னவாகியிருப்பாள்? எனக்காக வாழ்வதாகச் சொன்னாளே..?
மரகதம் பற்றிய நினைவு மட்டுமே சிவாவை முழுமையாக வியாபித்தது. அவளைப் பார்க்க வேண்டும் அல்லது அவளைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

முற்பிறவி நியாபங்கள் வந்திருப்பதை யாரிடம் பகிர்ந்துகொள்ளலாம். அரசாங்கத்திடமும் மக்களிடமும் சொன்னால், சாரதிப் பித்தனுக்கு உரிய மரியாதைகளும் மதிப்புகளும் எனக்குக் கிடைக்குமா? உலகம் என்னை ஆராதிக்குமா?
இவையெல்லாம் தன்னை முட்டாளாக்கிவிடும். பைத்தியம் என்று முத்திரைக் குத்திவிடும் என்று யதார்த்தமாக சிந்தித்தான், சிவா.இதில் மேலும் படிக்கவும் :