அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

Webdunia|
"நீங்கள் காலைல எத்தனை மணிக்கு எழுந்திறிப்பீங்க?" என் கால் விரல்களைப் பார்த்தபடி மரகதம் கேட்டாள்.

"எதுக்கு கேக்குற?"

"அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து நீங்கள் படிச்சுட்டு இருக்கிறத பார்த்தேன். அம்மா இன்னைக்கு என்னதான் கோலம் போடச் சொன்னாங்க. அப்ப பாத்தேன்."

"ஓ... அப்படியா..." வேண்டுமென்றே ஆர்வம் இல்லாதது போல் பதிலளித்தேன்.
"காலைல எல்லாம் படிச்சுட்டு இருக்கீங்க... இரவெல்லாம் எழுதுறீங்க... எப்ப தூங்குவீங்க?" அவளது கேள்வி, இருபத்திரெண்டு வயது பெண்ணின் சிந்தனைப் போல் இல்லாமல், முதல் வகுப்பு மாணவி போலவே இருந்தது. நிமிர்ந்து அந்த நூற்றியொரு விழுக்காடு உண்மை நிரம்பி வழியும் கண்களைப் பார்த்தேன்...
"டேய்... அப்படி என்னடா அந்த கண்ணாடியில இருக்கு... அதையே முறைச்சுப் பாத்துட்டு இருக்க..."

திடுக்கிட்டான். தலையைத் தூக்கி ராஜாராமைப் பார்த்தான். இயல்புக்குத் திரும்பியதுபோல் நடித்தான்.
"இல்லடா... நாளைக்கு செமஸ்டர் இல்லையா... அதான் படிக்கலாமா வேணாவான்னு யோசிச்சேன்," சமாளித்தான் சிவா.

"பார்த்தா அப்படி தெரியல மச்சி... ஏதோ பிரமை புடிச்சவன் மாதிரி கண்ணாடியவே வெறிச்சு பார்த்துட்டு இருந்த. சரி, பிரஷ் பண்ணிட்டு கிளம்பு. சாப்பிட போகலாம்."
குளியலறைக்குள் சென்றவன், யோசிக்கத் தொடங்கினான்.

'தூக்கத்தில் கண்களை மூடி கனவு காண்பது இயல்புதான். ஆனால், கண்கள் திறந்து கொண்டே என்னால் கனவு காண முடிந்தது எப்படி..?'
குழாயில் தண்ணீரை திறந்துவிட்டு, டூத் பிரஷ்ஷை வாயில் வைத்தான்.

"ராஜா..."

"என்ன மச்சி... சீக்கரம் டிரஸ் சேஞ்ச் பண்ணு. கிளம்புளாம்."
"இல்லடா. நான் பிரஞ்ச் பண்ணிக்கிறேன். காலேஜ் வரலை. செமஸ்டருக்கு படிக்கப் போறேன். இன்னிக்கு கிளாஸ் அட்டண்ட் பண்றாத இல்ல."

"போடா லூசு சிவா. அத அப்பயே சொல்லியிருக்கலாம் இல்ல." முணகிக் கொண்டே கிளம்பினான், ராஜாராம்.
இடுப்பில் இருந்த துண்டினைக் கழட்டிவிட்டு உள்ளாடை அணிந்தவன், நாற்காலியில் சரிந்தான்.

மீண்டும் கண்களைத் திறந்திருந்தபோதே கனவுகள் வரத் தொடங்கின...

"கோவிந்தன்னு பெத்தவங்க வச்சப் பேர விட்டுட்டு சாரதிப் பித்தனாம். எவண்டா அவன் சாரதி? அவன் எழுதின புத்தகத்தைப் படிச்சுட்டு இவனும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான். ஒழுங்கா காலேஜ் முடிச்சா, மாசம் நூறு ரூபாய் சுளையா சம்பாறிக்கலாம். அக்கறை இருக்காடி அவனுக்கு."
அம்மாவிடம் என்னைப் பற்றி அப்பா திட்டிக்கொண்டிருக்கிறார்.

1973... கவிதையே கதியாக இருந்த சாரதிப் பித்தன், மகன் நிஜப் பித்தனாகக் கூடாது என்ற விழைவுடன் கண்ட போதெல்லாம் திட்டிக் கொண்டிருந்த தந்தை, கணவனிடம் 'நீங்கள் சோல்றதே சரி' என்று சொல்லிவிட்டு, சாரதிப் பித்தனின் கலைந்த முடிகளைக் கோதும் அம்மா. வீதிக்கொரு கவிஞர்களில் இவனும் ஒருவன் என்று சாரதிப் பித்தனை உதாசினப்படுத்திய பத்திரிகைகளுமபதிப்பகத்தார்களும், காயமடைந்த இதயத்தைக் கடைக்கண் பார்வையாளேயே குணப்படுத்தும் காதல் வைத்தியச்சி எதிர் வீட்டு மரகதம்...
கோவிந்தனாகப் பிறந்து சாரதிப் பித்தனாக மாறி, கவிதைகள் பல படைத்து, அவற்றில் முதல் கவிதை பிரசுரமாவதற்கு முன்னரே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே கடைவீதியில் காளை முட்டி இருபத்து ஒன்பதே வயதில் மாண்டது வரை... கோர்வையாக அனைத்தும் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.
இப்போது சிவா புரிந்துகொண்டான், தான் கண் விழித்தப்படி கண்டவை கனவல்ல; அத்தனையும் நிஜம்... முற்பிறவியின் நிகழ்வுகள்!

நான் சாரதிப் பித்தனா? ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலுள்ள தமிழ் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கவிதைகளை வடித்தவனா? இலக்கியவாதிகளின் பேச்சில் மூச்சுக்கு முந்நூறு முறை சுட்டிக்காட்டப்படுகிற கவிஞனா? உலகின் 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரனா? இறந்தபின் கொடுக்கப்பட்ட பல நூறு விருதுகளுக்கு உரியவனா?
முற்பிறவியின் நிகழ்வுகள் மட்டுமல்ல; தனது முதல் படைப்பான 'காவிரி' கவிதை முதல் இறுதியில் கடைசி இரு வரிகள் முடிக்காமல் விடுபட்ட 'அவசரநிலைக்கு அவசரம்' கவிதை வரை அத்தனையும் சிவாவின் சிந்தனையில் குடிவந்துவிட்டது.

பகீரென்றது.
சாத்தியமா? உண்மையில் தம் நினைவலையில் சிக்கியிருப்பது, முற்பிறவியின் நிகழ்வுகள் தானா? ஜோதிடரை அணுகலாமா? உளவியல் மருத்துவரிடம் ஆலோசிக்கலாமா..?

இப்படி பல ஆமாக்களும் கேள்விக்குறிகளும் அவன் மனதில் நீண்டு கொண்டே சென்றன.
யோசித்தான்... சிந்தித்தான்... எழுந்தான்... நடந்தான்... அமர்ந்தான்... எழுந்தான்... தண்ணீர் குடித்தான்... அமர்ந்தான்... யோசித்தான்... சிந்தித்தான்...
இதில் மேலும் படிக்கவும் :