பாட்டி கதைகளில் மறைவும் புதிய தீர்வும்

விழியன்

Webdunia| Last Modified வியாழன், 16 ஜனவரி 2014 (13:00 IST)
சில தலைமுறைகள் முன்னர் வரையில் குழந்தைகளுக்குக் கதைகள் ஏராளமாக எளிதாகச் சென்றடைந்தன. தினம் தினம் கதைகள் கேட்பார்கள், சுவையான, சுவாரஸ்யமான கதைகள். விடுமுறை நாட்களின் மாலைகளும் இரவுகளும் பாட்டி சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கும். பாட்டியின் வழியே கதை கேட்க அத்தனை ஆர்வமாக இருப்பார்கள் பேரன் பேத்திகள். உணவு உண்ணும் பொழுதில் இருந்து ஆரம்பித்துவிடும் இந்தக் கூற்று, நிலாவினைக்காட்டி தூங்க வைப்பது வரையில் தொடரும். கதை கேட்பது பெரும்பாலும் கூட்டாகவே நிகழும்.

கூட்டுக்குடும்ப வாழ்வின் மிக முக்கியமான அம்சம் பாட்டிமார்கள் வழியே கடத்தப்பட்ட கதைகள் தான். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா மற்றும் மாமன் பிள்ளைகள், பக்கத்துவீட்டுப் பொடிசுகள் என்று பாட்டி அருகே அமர்ந்து கதைக் கேட்கும் காட்சியே ஒரு கவிதை தான். பெரும்பாலும் நீதிபோதனைக் கதைகள், ஆன்மீகக் கதைகள், கடவுள் பக்தி வளர்க்கும் சின்னக் சின்னக் கதைகள், இராமாயண மகாபாரதக் கதைகள், வீரபராக்கிரமக் கதைகள், பேய் கதைகள், நல்லதங்காள் கதை, இவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் நிலவும் கதைகள், வரலாறு, நாடோடிக்கதைகள் மேலும் பாட்டிகளின் கற்பனைக்கு ஏற்றவாறு கதைகள் அமையும்.
குழந்தைகளுக்குப் பாட்டிகள் என்றால் கொள்ளப்பிரியம். தாயிடம் கூட சில சமயம் கண்டிப்புகள் நிகழும். ஆனால் பாட்டிகளிடம் கண்டிப்பு வெளிப்படுவது அபூர்வம். எதையும் மன்னித்துவிடுவார்கள், மிகப் பாசமாக இருப்பார்கள், பிடித்த பலகாரங்களை செய்துகொடுப்பார்கள் இதனால் பாட்டிகளிடம் எல்லா குழந்தைகளுக்கும் நெருக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் வழியே கதைக் கேட்பது அவர்களுக்குப் பேரானாந்ததைக் கொடுத்து இருந்தது.
மாறிவிட்ட சமூகச் சூழ்நிலைகளால் கூட்டுக்குடும்பம் சிதைந்தது போலவே குழந்தைகளுக்கான கதைக் கேட்டாலும் சிதைந்து போய்விட்டது. மாற்றத்தை குறை சொன்னால் முன்னேற்றம் இருக்காது. தனிக் குடும்பம் - இந்தச் சூழலில் அவர்களுக்கு கதைகள் எப்படிச் சொல்வது என்று சிந்திக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :