வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் முதலிடம்

FILE
இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கடும் போட்டியில் நோக்கியாவை முந்திக்கொண்டு சாம்சங் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற பல இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து தங்களின் பல வகையான மாடல் போன்கள் மூலம் போட்டியிட்டாலும், முதல் இரு இடங்களை, நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களே கொண்டிருந்தன. தற்போது இந்த பலத்த போட்டிக்கு இடையே, மொத்த மொபைல் விற்பனையில், சாம்சங் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. நோக்கியாவிடமிருந்து இந்த இடத்தை, சாம்சங் கைப்பற்றியுள்ளது.

FILE
பல ஆண்டுகளாக, மொத்த மொபைல் விற்பனையில் தன்னுடைய அடிப்படை மற்றும் கூடுதல் வசதிகள் கொண்ட போன் மாடல்கள் மூலம் முதல் இடத்தைத் தக்க வைத்திருந்த நோக்கியா, அண்மையில் இரண்டாம் இடத்திற்குச் சென்று விட்டது. நோக்கியாவின் முதல் இடத்தைப் பெறுவதைத் தன் ரகசிய இலக்காகக் கொண்டிருந்த சாம்சங், இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும் ஐ.டி.சி. ஆய்வு அமைப்பு, அண்மையில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2013 ஆம் ஆண்டின், முதல் காலாண்டில், சாம்சங் 16 சதவீதப் பங்கினையும், நோக்கியா 15 சதவீதப் பங்கினையும் பெற்றுள்ளன. சாம்சங் வெற்றிக்கு அடிப்படை காரணம், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை வேகமாக உயர்ந்து வருவதுதான். கடந்த ஓராண்டில் மட்டும், ஸ்மார்ட்போன்களின் விற்பனை 74 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவில் மட்டும் 33 சதவீதப் பங்கினை சாம்சங் கொண்டு, மொத்த மொபைல் போன் விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

FILE
இதனை உணர்ந்த நோக்கியா, ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் தன் லூமியா மாடல் மொபைல் போன்கள் மூலம் விற்பனையை உயர்த்தப் பாடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் விற்பனையில், தன் பங்கினை நோக்கியா 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தப் பிரிவில், எச்.டி.சி. நிறுவனமும், தன் பங்கினை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த முயற்சித்து வருகிறது.

மொத்த மொபைல் போன் விற்பனை வருமானத்தில், ஸ்மார்ட்போன்களின் பங்கு 46 சதவீதமாக இருப்பதாக, ஐ.டி.சி. அறிவித்துள்ளது. அதே போல, மொபைல் போன்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 90 சதவீதம் பயன்படுத்தப் படுகிறது. மற்றவை வெறும் 10 சதவீத இடத்தைப் பிடிக்கவே போட்டியிட்டு வருகின்றன.

சந்தைக்கு வந்த 6 கோடியே 10 லட்சம் மொபைல் போன்களில் 5 கோடியே 46 லட்சம் மொபைல் போன்கள் அடிப்படை மற்றும் கூடுதல் வசதிகள் கொண்டவையாகவும், 61 லட்சம் போன்கள் ஸ்மார்ட்போன்களாகவும் இருந்தன.