பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்புகளுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு


Suresh| Last Updated: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (10:38 IST)
அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ‘லேண்ட் லைன்’ இணைப்புகளின் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக மே 1 ஆம் தேதி முதல் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

 

 
இது குறித்து பி.என்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 
 
மே மாதம் முதல் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர், இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை நாடு முழுவதும், எந்த நிறுவனத்தின் லேண்ட்லைன் தொலைபேசிகளுக்கும், செல்போன் எண்களுக்கும் கட்டணமின்றி எண்ணிக்கை இல்லாமல் பேசிக்கொள்ளலாம். இந்த திட்டம் கிராம மற்றும் நகரங்களில் இணைப்புகள் பெற்றுள்ள அனைவருக்கும் பொருந்தும். 
 
மேலும், தரைவழி தொலைபேசியில் சிறப்பு திட்டம் வைத்திருப்போர், பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்போருக்கும் இத்திட்டம் பொருந்தும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
லேண்ட் லைன் இணைப்புகளில் முதலிடத்தில் இருந்த பி.எஸ்.என்எல் நிறுவனம் சமீபத்தில் வெளியான டிராய் புள்ளி விவரத்தில் பலத்த சரிவைச் சந்தித்தது. 
 
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1.62 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். இதையடுத்து இந்த சலுகைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :