2013ஆம் ஆண்டில் துடிம ஒளிபரப்பு – டிராய்

Webdunia| Last Modified வெள்ளி, 30 ஜூலை 2010 (21:11 IST)
பல தொலைக்காட்சி வரிசைகளை துல்லியமாகத் தரவல்ல துடிம ஒளிபரப்புச் சேவை (Digital Broadcasting Service) தொடர்பான பரிந்துரை அடுத்த வாரம் மத்திய அரசிற்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of india - TRAI), 2013ஆம் ஆண்டு முதல் துடிம ஒளிபரப்பு இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளது.
மும்பையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த துடிம ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய டிராய் தலைவர் ஜே.எஸ்.சர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.
துடிம ஒளிபரப்பு துவங்கும்போது நாடு முழுவதிலும் துல்லியமான தொலைக்காட்சி சேவை மக்களுக்கு கிட்டுவது மட்டுமின்றி, தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் எதிர்நோக்கிவரும் பல பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும் என்று சர்மா கூறியுள்ளார்.2013ஆம் ஆண்டு துவங்கும் துடிம ஒளிபரப்பு முதலில் நான்கு பெருநகரங்களிலும், பிறகு 42 இரண்டாம் நிலை நகரங்களிலும், அதன் பிறகு ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் அதிகமான தொலைக்காட்சி வரிசைகளைப் பார்ப்பதற்கும், துல்லியமான படக்காட்சிகளை காண்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று சர்மா கூறியுள்ளார்.
வான் ஒலி அலைக்கற்றையை (ரேடியோ ஸ்பெக்ட்ரம்) பயன்படுத்தி ஒன்றிற்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை ஒன்றுபடுத்தி அவைகளை ஒரே நேரத்தில் கொண்டு சென்று பிறகு அவைகளை பிரித்து தனித்தனியாக வழங்கும் வசதியே துடிம ஒளிபரப்பின் (டிஜிட்டல் பிராட்காஸ்டிங்) தொழி்ல்நுட்ப வசதியாகும். தற்போது இருப்பது அனலாக் எனப்படும் ஒரு அலைக்கற்றையில் ஒரு ஒளிபரப்பை மட்டுமே செய்யக்கூடிய தொழில் நுட்பமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :