2008-ல் 49 மில்லியன் இந்தியர்கள் இணையதளங்களை பயன்படுத்தியுள்ளனர்!

Webdunia|
புதுடெல்லி: 2008-ஆம் ஆண்டு 49 மில்லியன் பேர் இணையதளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 40 மில்லியன் பேர் நகரவாசிகள். 9 மில்லியன் பேர் நகரம் தாண்டிய கிராமப்புறப் பயனாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ஜக்ஸ்ட்கன்சல்டின் "இந்தியா ஆன்லைன் 2008" ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது. 40 நகரங்கள், 160 கிராமங்களில் 12,500ற்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

இந்திய மக்கள் தொகையில் இணையத்தின் ஊடுருவல் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் 3 விழுக்காடு அதிகரித்து 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல் கிராமப்புறங்களில் இணையத்தின் ஊடுருவல் 4.5 விழுக்காடாக உள்ளது.
நகர்ப்புறத்தில் வாழும் ஒவ்வொரு 10 இந்தியர்களில் ஒருவர் என்ற வீதத்தில் தற்போது இணையதள இணைப்பு வைத்துள்ளனர். இணையதளப் பயனாளர்களில் இரண்டில் மூன்று பங்கு பயனாளர்கள் பெரு‌ம் நகரங்களுக்கு வெளியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைத்து பொருளாதார மட்டங்களிலும் இணியதள பயன்பாடு தற்போது சமச்சீராக பரவியுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இதில் குறிப்பாக ஆங்கிலத்தை காட்டிலும் இந்திய மொழி இணையதளங்களுக்கு வருகை தருபவர்கள் வீதம் 70 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

2007-ல் ஆங்கில இணையதளங்களை பயன்படுத்தியவர்கள் 41 விழு‌க்காடாக இருந்தனர் இந்த ஆண்டு இது குறைந்து 28 விழு‌க்காடாக மட்டுமே உள்ளது.

இணையதளத்தை பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 35 வயதுடையவர்களே என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது 77 விழுக்காடு இந்த வயதுப் பிரிவினர்களே. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 10 விழுக்காடு அதிகமாகும்.
ஆனால் இந்த ஒட்டுமொத்த 49 மில்லியன் நெட்வாசிகளில் பெண்களின் பங்கு 17.6 விழுகாடுதான். ஆனால் நகர்ப்புறத்துப் பெண்கள் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதாக இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இணையதளப் பயனாளர்களில் 51 விழுக்காட்டினர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் சம்பள ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தை பயன்படுத்துவோர்கள் சராசரியாக சாட்டிங், மின்னஞ்சல், இசை மற்றும் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்தல், வீடியோக்கள் மற்றும் படங்களை பகிர்ந்து கொள்ளுதல், கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தல், வேலை மற்றும் திருமணம் தொடர்பான இணையதளங்களுக்கு செல்லுதல் உள்ளிட்ட ஒரு 15 நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இணையதள சாட்டிங், வலைப்பதிவுகளுக்கு செல்லுதல் இந்த நடவடிக்கைகளில் 81 விழுக்காடை ஆக்ரமித்துள்ளது.

44 மில்லியன் பேர்களுக்கு, அதாவது 91 விழுக்காட்டினருக்கு முக்கிய இணையதள நடவடிக்கை என்பது மின்னஞ்சல் நடவடிக்கையே என்றாலும், இணையதள ஷாப்பிங் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்று இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :