10 ஆண்டுகளைக் கடந்த வெப்துனியா.காம்!

Webdunia|
இணையத்தின் பலன் இந்திய மக்களுக்கு முழுமையாக சென்று சேர வெண்டுமெனில் அதை அவர்களின் மொழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத இலக்கோடு துவக்கப்பட்ட வெப்துனியா.காம் இணையப் பல்கலைத் தளம் 10 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

1999ஆம் ஆண்டு இதே நாளில்தான் வெப்துனியா.காம் இணையப் பல்கலைத் தளத்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்தி மொழியில் தோன்றிய முதல் இணையப் பல்கலைத் தளம் என்ற பெருமையுடன் பிறந்த வெப்துனியா.காம், அம்மொழி பேசும் மக்களிடையே மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

செய்தி, விளையாட்டு, கிரிக்கெட், அறுசுவை, சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மிகம் என்று மக்களின் அனைத்து சுவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடமளித்து இணைய உலகில் வண்ணத்தில் மலர்ந்த வெப்துனியா.காம் வெகு விரைவிலேயே இந்தி மக்களின் அபிமானம் பெற்றத் தளமாக உயர்ந்தது.
இந்தியில் தனது இணையத் தளம் பெரும் வெற்றி பெற்றதைக் கண்ட எமது நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வினய் சஜ்லானி அவர்கள், இந்தியாவின் இதர மொழிகளிலும் இணைய பல்கலைத் தளங்களைக் கொண்டு வர வேண்டு்ம் என்று முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்வு செய்த முதல் மொழி தமிழ்.

வெப்துனியா.காம் பிறந்த 6 மாத காலத்தில் தமிழில் வெப்உலகம்.காம் பிறந்தது. 2000வது ஆண்டில் தமிழ் புத்தாண்டுத் தினமான ஏப்ரல் 14ஆம் நாள் வெப்உலகம்.காம் பிறந்தது. வெப்உலகம்.காம் இணைய பல்கலைத் தளம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த சில மாதங்களிலேயே மலையாளத்தில் வெப்லோகம்.காம் பிறந்தது.
இன்று இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி என ஒன்பது மொழிகளில் அந்தந்த மொழியின் பெயரை முதலாகவும், வெப்துனியா என்ற பெயரை பொது இணையாகவும் கொண்டு இந்திய மொழிகளில் அதிக இணைய பல்கலைத் தளங்களை வழங்கும் தளமாக வெப்துனியா.காம் விளங்குகிறது.

இந்த வெற்றிக்கு எமது நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வினய் சஜ்லானியின் தொலை நோக்கும், இந்திய மொழி இணைய வாசிகளின் தன்னிகரற்ற ஆதரவுமே காரணம். எங்கள் வாசகர்களாகிய நீங்கள் அளிக்கும் ஆதரவே வெப்துனியா.காமின் வளர்ச்சிக்கு வித்திட்டது, இன்றுவரை வளர்த்தும் வருகிறது.
உங்களை நினைத்தே ஒவ்வொரு பணியையும் எங்களால் இயன்ற அளவிற்கு சீருடன் செய்து வருகிறோம். இது வரும் காலங்களிலும் தொடரும் என்று உறுதி அளிக்கிறோம்.


இதில் மேலும் படிக்கவும் :