பிளாக்பெர்ரி: இந்தியா, அரபு நாடுகளுடன் பேச அமெரிக்கா முடிவு

Webdunia| Last Modified வெள்ளி, 6 ஆகஸ்ட் 2010 (14:34 IST)
கனடா நாட்டின் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தின் தயாரிப்பான பிளாக்பெர்ரி ஸ்மார்ட் போன் தொடர்பான பாதுகாப்பு அச்சம் குறித்து இந்தியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள். செளதி அரேபியா ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

மின்னஞ்சல், இணையத்தொடர்பு, தரவுகள் இறக்கம், அனுப்புதல் என்று கணினித் தொடர்பான அனைத்தையும் செலபேசி வாயிலாகவே செயல்படுத்தும் வசதிகளை அளிக்கும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட் போனை அனுமதிப்பதில்லை என்று ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகள் முடிவெடுத்தன. பிளாக்பெர்ரி மூலம் தாங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களின் பாதுகாப்புக் குறித்த அச்சம் காரணமாகவே அதனை தங்கள் நாட்டில் விற்க அனுமதி மறுத்தன.
உலக அளவில் பிளாக்பெர்ரியின் சந்தைப் பங்கு 21 விழுக்காடாகும். மிக வேகமான சந்தையில் வளர்ந்துவரும் விற்பனைக்கு முட்டுக்கட்டை போடும் விதமான ஐ.அ.நாடுகளின் முடிவு ஆகிவிட்டதால், அதற்குத் தீர்வு காண ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக அந்நிறுவனம் அமெரிக்க அரசை நாடியுள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே.கிராலி, ஐக்கிய அரபுக் குடியரசு, சவுதி அரேபியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச முடிவெடுத்துள்ளதாகவும், பிளாக்பெர்ரியின் பாதுகாப்புத் தொடர்பாக அந்நாடுகள் கொண்டிருக்கும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
கனடா நாட்டின் ஸ்மார்ட் போன் விற்பனையை முன்னெடுக்க அமெரிக்கா ஏன் இந்த அளவிற்கு சிரத்தையாக இருக்கிறது என்பது தெரியவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :