நோக்கியா பி.எல்-5சி பேட்டரிகளை மாற்ற ஏற்பாடு

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (19:05 IST)
நோக்கியா செல்பேசிகளில் பி.எல்-5சி பேட்டரி இருந்தால் அந்த செல்போனுக்குரியவர்கள் அந்த ரக பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம் என்று நோக்கியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

பி.எல்-5சி பேட்டரிகள் நோக்கியாவின் உற்பத்தி பொருள்களில் பயன்படுத்தப்படும் 14 வெவ்வேறு வகையான பேட்டரிகளில் ஒன்று. நோக்கியா நிறுவனம் பி.எல்-5சி பேட்டரிகளுக்காக அனேக பொருள் வழங்குவோரைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் இணைந்து 30 கோடிக்கும் அதிகமான பி.எல்-5சி பேட்டரிகளை உற்பத்தி செய்துள்ளனர்.

இவற்றில் இந்தியா-நோக்கியா தொழிற்குறி உடைய மட்சுஷிடா பேட்டரி இண்டஸ்டிரியல் நிறுவனம் என்ற ஜப்பான் நிறுவனம் 2005-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 நவம்பர் முடிய 4 கோடியே 80 லட்சம் பேட்டரிகளை தயாரித்து கொடுத்து உள்ளது. இவற்றில் மட்டுமே உலகம் முழுவதும் 100 வெப்ப மிகுப்பு நிகழ்வுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளன.
மின்னூட்டம் (சார்ஜ்) செய்யப்படும் போது சில அரிதான நிகழ்வுகளில் மின்சுற்றுக் குறையினால் வெப்ப மிகுப்பு ஏற்படுவதை நோக்கியா கண்டுபிடித்துள்ளது. வெப்ப மிகுப்பு நிகழ்வுகள் தவிர மிக மோசமான காயங்களோ, அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை.

இத்தகைய பி.எல்-5சி பேட்டரிகளை கொண்ட செல்பசிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த பேட்டரிகளுக்குப் பதில் வேறு பேட்டரி பெற்றுக் கொள்ளலாம். நோக்கியாவின் எல்லா உற்பத்திப் பொருள்களிலும் பி.எல்-5சி பேட்டரிகள் பயன்படுத்தப்படவில்லை. மேலும் உபயோகத்தில் உள்ள பி.எல்-5சி பேட்டரிகளில் ஒரு பகுதியே இந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
நோக்கியா செல்போன் வைத்து இருப்பவர்கள் அதில் பி.எல்-5சி பேட்டரி உள்ளதா என்பதை அறிய அந்த செல்போனில் இருந்து பேட்டரியை வெளியே எடுக்க வேண்டும். `நோக்கியா' மற்றும் `பி.எல்-5சி' ஆகியவை பேட்டரியின் முன்பக்கம் அச்சிடப்பட்டிருக்கும். பின்பக்கம் நோக்கியா அடையாளக் குறி மேலே தென்படும். மேலும் பேட்டரி அடையாள எண் 25 இலக்கங்களுடன் கீழே காணப்படும்.
2005-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 நவம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் மட்சுஷிடா தயாரித்த பேட்டரிதானா அது என்பதை நுகர்வோர் கண்டறிய இந்த அடையாள எண் உதவும். அந்த எண்ணை தங்களது பேட்டரியுடன் ஒப்பிட்டு இலவசமாக புதிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம்.

அதற்கு நோக்கிய இணையதளத்திலோ அல்லது நுகர்வோரின் உள்ளூர் அழைப்பு மையத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று நோக்கிய அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :