தமிழ் இணைய மாநாடு வெற்றி - முனைவர் ஆனந்தகிருஷ்ணன்

Webdunia|
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்ட தமிழ் இணைய மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று இம்மாநாட்டுக் குழுவின் தலைவர் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்பட்டது. 3 நாள் நடந்த இணைய மாநாட்டுக்கு 450க்கும் அதிகமான கட்டுரைகள் அனுப்பப்பட்டிருந்தன. இதில் 130 கட்டுரைகள் ஏற்கப்பட்டன. இந்த கட்டுரைகள் கடந்த 4 நாள் நடந்த கணினி மாநாட்டு ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன.

இது தொடர்பாக முனைவர் ஆனந்தகிருஷ்ணன் கூறியதாவது :
தமிழ் இணைய மாநாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மிகச் சிறப்பாக இந்த மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டு நிகழ்வுகளின் இறுதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வருக்கு மாநாட்டுக் கோரிக்கையாக முன்வைத்துள்ளோம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி மொழியில் மையம் அமைக்க வேண்டும். தானியங்கி மொழி பெயர்ப்பு மற்றும் இணையத்தில் தமிழ் தேடல் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்ய கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் ஏயுகேபிசி மையத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும். எழுத்துருக்களை வருடி உணர்ந்து மின் வடிவுக்கு மாற்ற தொழில்நுட்பம், கணினித் தொழில்நுட்பத்தையும் பொறியியலையும் முழுமையாகத் தமிழில் சொல்லிக் கொடுப்பதற்கான பயிற்றி முறைகளை உருவாக்குதல், செல்போன்களில் தமிழை முழுமையாக இயங்க வைக்க தொழில்நுட்பங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த திட்டங்களுக்கான பொறுப்புகளை பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் தலா ரூ.10 கோடி வீதம் ரூ.70 கோடி கணினி வளர்ச்சி ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழக அரசு மற்றும் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் பெறும் கணினிகளில் தொடக்க திரை முதற்கொண்டு தமிழில் இருக்க வேண்டும். செல்போன்களில் தமிழில் எழுதவும், படிக்கவும் தேவையான தொழில்நுட்ப வசதி செய்ய வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் கணினியை தமிழில் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கணினிகளின் இயக்குதளங்கள், மென்பொருட்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும். தமிழ் கணினி ஆய்வேடுகள் சமர்ப்பிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். புனித ஜார்ஜ் கோட்டையில் இணையத் தமிழ் அலுவலகம் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ற இணையம் வழித்தமிழ் பாடத் திட்டங்களை அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து பன்னாட்டுக் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் இந்தப் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் முன்மொழிந்துள்ளோம் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :