தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி 32% உயர்வு

Webdunia|
தமிழ்நாட்டில் மென்பொருட்களின் ஏற்றுமதி 32 ‌விழு‌க்காடு உயர்ந்துள்ளது என்று ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஐ.எப்.ஏ. மேலாண்மை ஆலோசனை மையமும், தாய்மடி தமிழ்ச் சங்கமும் இணைந்து மார்ச் மாதம் 30-ம் தேதி "சென்னை வேலைவாய்ப்பு முகாம் 2008' நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற 484 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:
தொழில் வளர்ச்சியில் வெற்றி பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் பல்வேறு நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பொறியியல் படித்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 77 புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. மென்பொருட்கள் ஏற்றுமதியில் 32 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது.
தனிமனித ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரத்தில் இருந்து விரைவில் ரூ. 50 ஆயிரமாக உயரும் என்றார். நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மேயர் மா. சுப்பிரமணியன், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எச்.எஸ். லீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :