சீனாவுக்கு நகரும் இந்திய ஐடி நிறுவனங்கள்

Webdunia| Last Modified புதன், 3 நவம்பர் 2010 (17:36 IST)
சீனாவில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐ.டி. சேவை நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அந்த சந்தையில் தங்களுக்கான இடத்தை பெரிய அளவில் வளைத்துப்போட, டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) , விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற இந்தியாவின் மாபெரும் ஐ.டி. நிறுவனங்கள் படு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீனா அச்சுறுத்தலாக விளங்கிய நிலையில், அதன் பின்னர் தற்போதுதான் முதல்முறையாக, சீனாவில் இந்திய நிறுவனங்கள் கால் பதித்துள்ளன.

சீனாவின் செங்டு மற்றும் தலியான் ஆகிய நகரங்களில் டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்களது 10 விழுக்காடு புதிய அவுட் சோர்சிங் பணிகளை அலுவலகம் அமைத்து செய்ய தொடங்கியுள்ளன.
பூகோள - அரசியல் அச்சுறுத்தல் இல்லாத மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் உள்ள இடங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்தியாவுக்கு வெளியே உள்ள சில இடங்களிலும், தங்களது சேவைகளை செய்து வாங்க வேண்டும் என்று ஜிஇ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற முன்னணி வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள், இந்திய ஐடி நிறுவனங்களை வலியுறுத்தி வருகின்றன.
மேலும் சீனாவில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரித்ததால், ட்ராகனால்டின் - Dragonland - 10 பில்லியனுக்கு அதிகமான மதிப்புடைய அவுட்சோர்சிங் சந்தையை கைப்பற்றிவிடலாம் என்றும் இந்திய நிறுவனங்கள் உணர்ந்துள்ளதால்தான், அவை சீனாவில் கடை விரிக்க தொடங்கியுள்ளன.

டிசிஎஸ் தற்போதுள்ள தனது பணியாளர்களின் எண்ணிக்கையான 1,200 ஐ, அடுத்த ஐந்தாண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.அதேப்போன்று இன்ஃபோசிஸ் 4,000 திறமை வாய்ந்த பணியாளர்கள் குழு ஒன்றை உருவாக்குவதற்காக 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ, அடுத்த ஓர் ஆண்டுக்குள் சுமார் 1,000 பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, அவர்களுக்கு வேலை கொடுக்க வேலைகளும் தேவை என்பதால்தான், ஜிஇ போன்ற வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியா தவிர்த்த வெளிநாடுகளிலும் தங்களது கிளைகளை திறந்து, அந்நாட்டு பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து, அவர்களை தங்களது நிறுவன பணியாளர்கள் குழுவில் சேர்த்துக்கொள்கின்றன இந்த நிறுவனங்கள்!
மேலும் கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கு சீனாவிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தினால், ஒரு சில சிக்கல்கள் ஏற்படலாம் என்ற சூழ்நிலைக்கிடையேயும், சீனாவில் தாங்கள் தடம் பதித்துள்ளதாக கூறுகிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிபுலால்.


இதில் மேலும் படிக்கவும் :