சீனாவில் ‘யூ-டியூப்’ இணையதளத்திற்கு தடை?

பீஜிங்| Webdunia| Last Modified புதன், 25 மார்ச் 2009 (13:36 IST)
பிரபல வீடியோ இணையதளமான யூ-டியூப் (YouTube) தளத்திற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு முதல் சீனாவில் யூ-டியூப் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அந்நாட்டு அயலுறவு அமைச்சக பேச்சாளர் கின் காங் கூறுகையில், சீன அரசு இணையதள பயனபாட்டிற்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை நேர்மாறானது.
இணையதள பயன்பாட்டிற்கு போதிய சுதந்திரம் சீனாவில் உள்ளது. அதே தருணத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும் தகவல்களை தடை செய்வதும் அரசின் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் இரவு முதல் யூ-டியூப் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாற்று குறித்து கேட்டதற்கு, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என கின் காங் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :