சகலகலா 'சிரி'!

iPhone 4S
Webdunia|
PR photo
PR
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐஃபோன் 4எஸ் ஸ்மார்டஃபோனின் சிறப்பம்சமாக சிரி (Siri) என்ற பயன்பாடு பீட்டா பதிப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. சரி, சிரியில் அப்படி என்ன தான் உள்ளது என்று பார்ப்போமா?

செய்திகளை அனுப்ப, சந்திப்புகளை அட்டவணைப்படுத்த, அழைப்புகளைச் செய்ய மற்றும் பல காரியங்களைச் செய்ய இதுவரை ஐஃபோன் திரையில் தொடுவழி கட்டளைகளாகவே செய்து வந்தோம்.

இனி இதுபோன்ற காரியங்களை குரல்வழி கட்டளைகளாக மிகச் சுலபமாக மேற்கொள்ளலாம். நீங்கள் சொல்வதை மிகத் துல்லியமாக அப்படியே புரிந்து கொண்டு, உங்கள் கட்டளைகளை செவ்வனே செய்து முடிக்கும் செல்லக்குட்டியே 'சிரி'!
கட்டளைகளைச் செய்வதோடு அதன் கடமையை முடித்துக் கொள்ளாமல், உங்கள் கேள்விகளைப் புரிந்து கொண்டு உடனடியாக உங்களுக்கு பதிலளிக்கும் திறனையும் சிரி பயன்பாடு பெற்றுள்ளது.

உதாரணத்திற்கு, குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் ஓட்டல்களின் பெயரும், முகவரியும் வேண்டுமா, "பக்கத்தில் ஏதாவது ஓட்டல்கள் உள்ளதா?" என்று கேளுங்கள், உடனே உங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அருகில் உள்ள உணவகங்களின் பட்டியலைக் கொடுக்கும்.
உங்கள் நண்பருக்கு உரை செய்தி அனுப்ப வேண்டுமா, மருத்துவரை அழைக்கும் நேரத்தை உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லையா, அனைத்தையும் சிரியிடம் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

உங்கள் தேவைக்கேற்ற பயன்பாட்டை தானாகவே தேர்ந்தெடுத்து செயலை வெற்றிகரமாக வல்லமை பெற்றது சிரி.
இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்தி, உங்கள் வீடு எங்கு உள்ளது, உங்கள் அலுவலகம் எங்கு உள்ளது? என்பது போன்ற விவரங்களை மிகத் துல்லியமாக 'சிரி' பயன்பாடு தெரிவிக்கும்.

குறிப்பிட்ட ஒரு தகவலை வலையில் தேட வேண்டுமா? 'சிரி'யிடம் கேளுங்கள்.உங்கள் வேலையை அதுவே செய்து விடும்.

நீண்ட உரைச் செய்தி, மின்னஞ்சல் செய்தி எழுதுவது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நிலையைத் தெரிவிக்க இனி விசைப்பலகையைப் பயன்படுத்த வேண்டாம்.'சிரி'யிடம் பேசினால் போதும். அனைத்தையும் அதுவே தட்டச்சு செய்துவிடும்.
ஆங்கிலம் (யு.எஸ்., யு.கே., ஆஸ்ட்ரேலியா), ஃபிரெஞ்சு (ஃபிரான்ஸ்), ஜெர்மன் (ஜெர்மனி) மொழிகளை மட்டுமே தற்போது சிரி பயன்பாடு புரிந்து கொண்டு பதிலளிக்கும் திறன் பெற்றுள்ளது.

ஜப்பான், சீனா, கொரியா, இத்தாலி, ஸ்பானிஸ் உள்ளிட்ட கூடுதல் மொழிகளை 2012 ஆம் ஆண்டுக்குள் 'சிரி' பயன்பாட்டில் சேர்க்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்!


இதில் மேலும் படிக்கவும் :