ஒபாமா முடிவு: பிரதீபா பாட்டீல் வருத்தம்

Webdunia| Last Modified வெள்ளி, 8 மே 2009 (16:08 IST)
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் தொடர்பான பணிகள், பி.பி.ஓ எனப்படும் அயல் அலுவலகப் பணிகளை அளிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கான வரிச்சலுகை ரத்து செய்யப்படும் என்று அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்த கருத்துக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கவலை தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் புதிய முடிவால் இந்தியாவில் குறிப்பாக பெங்களூருவில் ஐ.டி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் எனற நிலை உருவாகியுள்ளது.

பெங்களூருவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியுடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, ஒபாமாவின் முடிவால் இந்தியாவில் எத்தகைய பாதிப்புகள் உருவாகும் என்பது குறித்து அறிந்து கொள்வதில் பிரதீபா பாட்டீல் தீவிர ஆர்வம் காட்டினார்.

மேலும் ஒபாமாவின் புதிய அறிவிப்பால், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பாதிக்கப்படும் என்ற தமது கவலையையும் பிரதீபா பாட்டீல் வெளியிட்டார்.
ஆனால், இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, ஒபாமாவின் முடிவால் இந்தியாவில் ஐ.டி. துறை பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று கூறினார்.

வெளிநாடுகளில் ஐ.டி தொடர்பான பணிகளை வழங்குவதால் கிடைக்கும் லாபத்தை அமெரிக்காவில் முதலீடு செய்யாத நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை திரும்பப் பெறுவது என்ற கருத்தை வரி சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் பேசுகையில் ஒபாமா கூறியிருந்தார்.
அதுபற்றி குறிப்பிட்ட நாராயணமூர்த்தி, அது வெறும் யோசனைதானே தவிர சட்டம் அல்ல என்றும், ஒபாமாவின் முடிவை நடைமுறைப்படுத்த இன்னும் காலம் உள்ளது என்றும் கூறினார்.

அப்படியே நடைமுறைப்படுத்தினாலும், இந்திய தகவல் தொழில்நுட்ப வர்த்தகத்தில் ஒபாமாவின் நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :