அயல் வணிக பணித்திறனில் இந்தியாவிற்கே முதலிடம்!

Webdunia| Last Modified செவ்வாய், 21 டிசம்பர் 2010 (16:37 IST)
உலக அளவில் அயல் வணிகப் பணிகளை (Business process out-sourcing) திறம்பட முடித்துத் தருவதில் இன்றளவும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது என்று இது தொடர்பாக ஆய்வு நடத்திய கார்ட்னர் ரிசர்ச் அமைப்பு கூறியுள்ளது.

அயல் வணிகப் பணிகளை திறம்பட செய்து முடித்துத் தரக்கூடிய 10 திறன்களையும் இந்தியாவின் அயல் வணிக பணி நிறுவனங்களும், அதில் பணியாற்றிடும் தொழில் நெறிஞர்களும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கார்ட்னர், இந்தியாவின் திறனை குறைப்பதாக குறைந்த காலமே பணியாற்றிய பின்னர் நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் நெறிஞர்களின் போக்கு உள்ளதென குறிப்பிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அயல் வணிக பணிகளைப் பெறுவதில் இந்தியாவிற்கு கடும் போட்டியளித்து வருகின்றன என்றும், சமீபகாலமாக சீனா இத்துறையில் வளர்ந்து வருகிறது என்பது தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் கார்ட்னர் கூறியுள்ளது.

“இந்தியாவில் அயல் வணிகப் பணிகளில் ஈடுபடும் நெறிஞர்களின் ஊதியமும், பணியாளர்கள் நிறுவனங்களை அடிக்கடி மாற்றிக்கொள்வது போன்றவை இருந்தாலும், இன்னமும் உலக நாடுகளின் அயல் வணிகப் பணிகளுக்கான முதன்மையான நாடாக இந்தியாவே திகழ்கிறத” என்றகார்ட்னர் ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் இயன் மாரியட் கூறியுள்ளார்.
உலகளாவிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டபோது தனது நாட்டில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படாமல் தடுக்க 583.9 பில்லியன் டாலர்கள் ஊக்கத் திட்டத்தை செயல்படுத்தியதும், ஷாங்காய் 2010 உலக தொழில் மேம்பாட்டுக் காட்சியின் காரணமாக அதற்குக் கிடைத்த மதிப்புயர்வும் சீனத்தை அயல் வணிகத் துறையிலும் முனனணி நாடாக வளர்த்து வருகிறது என்று கார்ட்னர் ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :