அமெரிக்காவைப் பிணைக்கும் அதி வேக அகண்ட அலை வரிசை அமைப்பிற்கு ஒப்பந்தம்!

Webdunia| Last Modified புதன், 21 ஜூலை 2010 (14:59 IST)
2015ஆம் ஆண்டிற்குள் அமெரிக்க ஐக்கிய குடியரசு முழுவதையும் பிணைக்கும் கம்பியில்லா அகண்ட அலை வரிசைத் தொடர்பை ஏற்படுத்தும் அதி நவீன தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நியூ யார்க் நகரில் இருந்து இயங்கிவரும் ஹார்பிங்கர் கேப்பிடல் பார்ட்னர்ஸ் என்று அந்த அமெரிக்க நிறுவனம், பின்லாந்து-ஜெர்மன் நாடுகளில் இருந்து இயங்கிவரும் நோக்கியா-சீமென் இணை நிறுவனத்துடன் இந்த கம்பியில்லா அகண்ட அலைவரிசை அமைப்பை நிறுவ 7 பில்லியன் டாலருக்கு (1 பில்லியன் = 100 கோடி) ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அதிவேக கம்பியில்லா அகண்ட அலைவரிசை தொடர்பை அமைத்து, நடத்தி, பராமரித்து அளிக்குமாறு நோக்கியா-சீமென் இணையை ஹார்பிங்கர் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அதிவேக தொலைத் தொடர்பின் பெயர் லைட் ஸ்கொயர்ட் (Light Squared) என்பதாகும்.

செல்பேசி (மொபைல்) வலை அமைப்புடன் செய்மதி (சாட்டிலைட்) தொடர்பை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் அமைக்கப்படும் இந்த கம்பியில்லா அதிவேக அகண்ட அலை வரிசை தொலைத் தொடர்பை, கம்பியில்லா தொலைத் தொடர்பு, கம்பி வட தொலைக்காட்சி, செய்தி அளிப்பாளர்கள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அளிக்கும். இதன் மூலம் 40,000 செல்பேசி தொடர்பு மையங்களுடன் லைட் ஸ்கொயர்ட் இணைப்பை ஏற்படுத்தி 2015ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் 92 விழுக்காடு மக்களுக்கு அதிவேக தொடர்பு வசதியை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :