ஆண் பிள்ளை வரமளிக்கும் ஐயனார்

கா.அய்யநாதன்

K. AYYANATHAN

நமது மக்கள் வழிபடும் ஐயனாரும், சபரிமலையில் குடிகொண்டுள்ள ஐயப்பனும் ஒரே நிலையில் அமர்ந்திருந்தாலும், இரு சாமிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. சபரிமலை உள்ளிட்ட கேரள கோவில்களில் உள்ள ஐயப்பன் தனித்து திகழும் தெய்வமாகவும், தமிழ்நாட்டுக் கோயில்களில் இருக்கும் ஐயனார் பூரணம், பிங்கலை எனும் இரண்டு சக்திகளுடன் காட்சியளிப்பதும்தான் அந்த அடிப்படை வேறுபாடாகும்.

வைகாசி விசாகத்தின் போது தமிழ்க் கடவுள் முருகனுக்கு காவடி எடுத்து வணங்குவதுபோல், ஐயனாருக்கும் வைகாசி விசாகத் தினத்தில் காவடி எடுத்து வழிபடுவது நடைபெறுகிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இறையாகத் திகழ்கிறார் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், வடசேரி கிராமத்தில் வதியும் ஐயனார்.

பல நூற்றாண்டுகளாக வடசேரி கிராம மக்களும், அப்பகுதியில் உள்ள மற்ற கிராமத்தினரும் வைகாசி விசாகத் தினத்தன்று ஐயனாருக்கு காவடி எடுத்து வணங்கிடும் வழக்கம் உள்ளது. காவடி எடுப்பது மட்டுமின்றி, பிறந்த குழந்தைகளுக்கு முதல் முறையாக முடி இறக்குவதும், காது குத்துவதும் அன்று நடைபெறும். அன்று இரவு அலங்கரிக்கப்பட்டத் தேரில் ஐயனார் வீதி வலம் வருவார். விசாகத்தின்போது சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் வடசேரி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் ஊருக்குத் திரண்டு வந்து விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு குல தெய்வங்கள் என்று பலவும் இருப்பினும், ஊரைக் காக்கும் எல்லைத் தெய்வமாயும், தாங்கள் வேண்டிய வரத்தை நல்கும் சாமி என்பதால் ஐயனாரை மிகவும் சேவித்து வழிபடுகின்றனர்.

கலை நயமிக்க குதிரை சிலைகள்
K. AYYANATHAN

வடசேரி ஐயனார் கோயிலை சுற்றி எங்கு பார்த்தாலும் குதிரை சிலைகள் இருக்கும். கடந்த ஆண்டில் கட்டப்பட்ட குதிரை சிலையில் இருந்து சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் கட்டப்பட்ட குதிரைகள் என்று பல்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் குதிரை சிலைகள் ஏராளமாக உள்ளன.

அ‌ய்யநாத‌ன்|
தமிழ்நாட்டில் வழிபடப்படும் குல தெய்வங்களில் மிக முக்கியமானவர் ஐயனார். தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் ஐயனார் காவல் தெய்வமாகவோ அல்லது குல தெய்வமாகவோ வணங்கப்படுகிறார்.
எதற்காக இங்கு இவ்வளவு குதிரை சிலைகள் உள்ளன? அது ஒரு பெரும் நம்பிக்கை வரலாறு. இங்குள்ள ஐயனாரிடம் ஆண் பிள்ளை வேண்டி குதிரை கட்டி விட்டால் நிச்சயம் ஆண் பிள்ளை பிறக்கிறது என்கிற நம்பிக்கை. அது இதுவரை ஒருவருக்குக் கூட பொய்க்கவில்லை என்று வடசேரி மக்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதற்கு அத்தாட்சியாகவே அத்தனைக் குதிரைகள் அங்கு நிற்கின்றன. இவர்கள் கட்டிவிடும் குதிரையில் ஏறித்தான் ஊரைப் பாதுகாக்க, தனது படைப் பரிவாரங்கள் புடை சூழ இரவு வலம் வருவாராம் ஐயனார். இதனை பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். இளம் வயதில் இப்படி குதிரை கட்டிவிடும் நம்பிக்கை குறித்து கேள்விப்பட்டபோது, இதெல்லாம் சில ஆண்டுகளில் மறைந்துவிடும் என்றுதான் தோன்றியது. ஆனால் இன்றளவும் தொடர்கிறது. யாராவது ஒருவர் இப்படி நம்பிக்கையோடு குதிரை கட்டி விட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :