நாளை வைகுண்ட ஏகாதேசி.. விரதம் இருப்பவர்களுக்கு வைகுண்ட பதவி கிட்டும்...!
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது. இதனை 'முக்தி ஏகாதசி' என்றும் அழைப்பர். இந்த விரதத்தை முறையாக கடைப்பிடிப்பது பாவங்களை போக்கி, சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான வாழ்வையும் அள்ளித்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விரதத்தை ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்றே தொடங்க வேண்டும். தசமியன்று ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி முழு உபவாசத்தை தொடங்க வேண்டும். உடல்நிலை காரணமாக உணவு தவிர்க்க முடியாதவர்கள் பழங்கள், பால் ஆகியவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம். ஏகாதசி அன்று துளசியை பறிக்க கூடாது; முன்கூட்டியே பறித்து வைத்த துளசியை ஏழு முறை உட்கொள்ளலாம், இது உடலுக்கு வெப்பத்தைத் தரும்.
அன்று இரவு முழுவதும் உறங்காமல் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பக்தி பாடல்களை பாடி இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட 21 வகை காய்கறிகளுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த முக்கோடி ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு வைகுண்ட பதவி கிட்டும் என்பது ஐதீகம்.
Edited by Mahendran