திருப்பாவை பாசுரம் பாடல் 29


ஸ்ரீ.ஸ்ரீ.| Last Updated: வியாழன், 14 ஜனவரி 2016 (16:22 IST)
திருப்பாவை பாடல் 29
 
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யாடியே போற்றும் பொருள்கேளாய்:
பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னேடு
உற்றோமே ஆவோம்: உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

 
 
பொருள் :
 
நோன்பு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள்,
தங்களின் உண்மையான விருப்பத்தை வெளியிடும்
பாடல்.
 
கண்ணா!
 
விடியற்காலை வேளையில் இங்கு வந்து, உன்னை வணங்கி உன் அழகிய திருவடிகளைப் போற்றி, நாங்கள் சமர்ப்பிக்கும் எங்களது விண்ணப்பத்தைக் கேட்டு அருள வேண்டும்.
 
பசுக்குலங்குளை மேய்த்து உண்ணும் எங்கள் குலத்தில் திருஅவதாரம் செய்த நீ, நாங்கள் உனக்குச் செய்யும் (உன்னுடைய) அந்தரங்கக் கைங்கரியத்தைப் பெற்றுக் கொள்ளாமல் விட்டு விடுவது தகாது.
 
கோவிந்தா!
 
நாங்கள் இங்கு வந்திருப்பது, இன்று கொடுக்கப்படும் பறையைப் பெறுவதற்காக அல்ல. எந்தக் காலத்திலும், நீ எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும், உனக்கு உறவினர்களாக ஆக வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் கைங்கரியம் செய்ய வேண்டும். இவற்றிற்கு முரண்பாடான எங்களின் மற்றைய விருப்பங்களை மாற்றி அருள் செய்ய வேண்டும். அதற்காகவே நாங்கள் வந்தோம். அருள் புரி.

                                                                                                     விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.


இதில் மேலும் படிக்கவும் :