திருப்பாவை பாசுரம் பாடல் - 24


ஸ்ரீ.ஸ்ரீ.| Last Modified சனி, 9 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை பாசுரம் பாடல் - 24
 
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றேன்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

 
 
பொருள்:
 
பக்தி நிறைந்த பெண்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, கண்ணன் நடந்து வருகிறான். அப்போது அவன் நடை அழகையும் வடிவழகையும் கண்டு தங்களையே மறந்த பெண்கள், கண்ணனை வாழ்த்தி, அதன்பிறகு தங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கும் 
பாடல்.
 
உலகத்தை அளந்தவனே! உன் திருவடிகள் பல்லாண்டு வாழ்க. தீயவனான இராவணன் இருக்கும் இலங்கைக்குச் சென்று அவனை அழித்தவனே! உன் திறமை பல்லாண்டு வாழ்க. சகடாசுரன் அழியும் படியாக அவனை உதைத்தவனே! உன் புகழ் பல்லாண்டு வாழ்க. கன்றின் வடிவாக வந்த அசுரனை எடுத்து, விளாமரவடிவாக வந்த அசுரன் மீது எறிந்து இருவரையும் அழித்தவனே! உன் திருவடிகள் பல்லாண்டு வாழ்க.
 
கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோபாலர்களையும் பசுக் குலங்களையும் கட்டிக் காத்தவனே! உன் குணம் பல்லாண்டு வாழ்க.
 
பகையை வென்று ஒழிக்கும் உன் கையில் உள்ள வேல் பல்லாண்டு வாழ்க; -என்றெல்லாம் பலவாறாகச் சொல்லி, உன் வீரத்தைப் பறை சாற்றும் சரிதங்களைப் புகழ்ந்து கொண்டு, இன்று வந்திருக்கிறோம். பறை கொள்வதற்காக வந்திருக்கிறோம். 
 
இறங்கி அருள் புரி கண்ணா!
 
                                                                                               விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.


இதில் மேலும் படிக்கவும் :