திருப்பாவை பாசுரம் பாடல் - 23


ஸ்ரீ.ஸ்ரீ.| Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை பாசுரம் பாடல் - 23

மாரி மலைமுழைஞ்சில மன்னிக்கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே, நீ பூவைப்பூவண்ணா ! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்.

 
 
பொரு‌ள்:
 
"சிம்மாசனத்தில் இருந்தபடி எங்கள் வேண்டுகோளைக் கேள்" என்று கண்ணனிடம் வேண்டும் பாடல்.
 
மழைக்காலத்தில் மலையில் உள்ள குகையில், சிங்கம் படுத்து உறங்கும். பெருமை வாய்ந்த அதே சிங்கம்; கண்களில் நெருப்புப் பொறி பறக்கும் படியாகக் கண்களை விழித்துக் கொண்டு, ஒரு வகையான வாசம் வீசும் படியான பிடரி முடிகளை எல்லாப் 
பக்கங்களிலும் உதறிக் கொள்ளும். அத்துடன் உடம்பை அசைத்து உதறிக் கொண்டு சோம்பல் முறித்து விட்டு, கர்ஜித்தபடி வெளியே வரும்.
 
கண்ணா! காயாம் பூப்போல நீல நிறம் கொண்டவனே! அந்தச் சிங்கத்தைப் போல, நீ உன் இருப்பிடத்திலிருந்து கிளம்பி, இங்கே நாங்கள் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும்.
 
அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிம்மாசனத்திலிருந்தபடி நீ, நாங்கள் வந்த காரியத்தைப் பற்றி விசாரித்து அருள் செய்ய வேண்டும்.
 
                                                                                                  விளக்கவுரை; ஸ்ரீ.ஸ்ரீ.


இதில் மேலும் படிக்கவும் :