திருப்பாவை பாசுரம் பாடல் 18


ஸ்ரீ.ஸ்ரீ.| Last Modified ஞாயிறு, 3 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை  பாடல் 18
 
உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்;
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

 

 
 
பொருள் :
 
"நந்தகோபலன் மருமகளே! நப்பின்னையே! கதவைத் திற" என நப்பின்னையிடம் வேண்டும் பாடல்.
 
நப்பின்னையே! மதங்கொண்ட யானைகளை, சர்வசாதாரணமாகத் தள்ளக் கூடியவர்; (ஏராளமான யானைகளைக் கட்டி வாழக் கூடியவர் என்பதும் உண்டு) எதிரிகளைக் கண்டு பயப்படாத தோள் ஆற்றலை உடையவர்; நந்த கோபர்.

அப்படிப்பட்ட நந்தகோபரின் மருமகளே! வாசம் கமழும் கூந்தலைக் கொண்டவளே! கதவைத்திற. இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த 
அழைப்பைக் கேளாயோ? குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா? பொழுது விடிந்து விட்டது. பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே! உன் கணவனான கண்ணனை போற்றிப் பாட வந்திருக்கிறோம். வளையல்கள் சப்தமிட, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திற. வா. 
 
இப்பாடலின் பெருமை: ஸ்ரீ இராமானுஜர், திருப்பாவையைப் பாடிய படியே பிக்‌ஷைக்குப் போவது வழக்கம். ஒரு நாள் அவர் தன் குருநாதர். பெரியநம்பிகள் திருமாளிகைக்கு, பிக்‌ஷைக்குப் போன போது, இப்பாடலைப் பாடினார்.

பெரிய நம்பியின் திருமகளான அத்துழாய் என்னும் பெண் ஒடிவந்து கதவைத் திறந்தாள். அப்போது இராமானுஜர் 'செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் 
மகிழ்ந்தேலோர் எம்மாவாய்' என்னும் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்.

கதவைத் திறந்த அத்துழாயைக் கண்ட ஸ்ரீராமானுஜர், அவளை நப்பின்னையாகவே நினைத்து வணங்கினார். அத்துழாய் உள்ளே 
ஓடிப்போய், "அப்பா! ஸ்ரீராமானுஜர் என்னைக் கண்டு, மயக்கமடைந்து விட்டார்" என்றார். பெரியநம்பிகளோ", அவர் வந்து மதகளிறு என்னும் பாசுரத்தைப் பாடியிருப்பார்" என்றார். ஸ்ரீராமானுஜரைப் போன்ற மகான்களையே சொக்க வைத்த பாடல் இது.
 
                                                                                              விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.


இதில் மேலும் படிக்கவும் :