திருப்பாவை பாடல் 14


Sasikala| Last Modified புதன், 30 டிசம்பர் 2015 (05:00 IST)
திருப்பாவை பாடல் 14
 
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம் எழும்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

 
 
பொருள் :
 
"உங்களையெல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்ன பெண், அதை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளை எழுப்பும் பாடல்.
 
இ‌னிமையாகப் பேசக்கூடிய நாக்கைக் கொண்டவளே! "உங்களை எல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்னாய். ஆனால், அதைச் செயலில் காட்ட மறந்துவிட்டாய். அத்துடன் அதைப்பற்றி வெட்கப்படவும் இல்லை.
 
பெண்ணே! எழுந்திரு.
 
இதோ பார். உங்கள் புறங்கடையில் செங்கழு நீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. (காலைப் பொழுதில் குவிந்து கொள்ளும்) ஆம்பல் பூக்கள் குவிந்து (மூடிக்) கொண்டுவிட்டன. காவி உடை அணிந்தவர்களும், தூய்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள் அவர்களது திருக்கோவிலில், சங்கை முழக்குவதற்காகப் போகின்றார்கள்.
 
சங்கு, சக்கரம் முதலியவைகளைக் கொண்ட பரந்த திருக்கரங்களை உடையவனும், தாமரை போன்ற திருக்கண்களை உடையவனுமான கண்ணனைப் பாடு.


இதில் மேலும் படிக்கவும் :