திருப்பாவை பாடல் 13


Sasikala| Last Modified செவ்வாய், 29 டிசம்பர் 2015 (05:00 IST)
திருப்பாவை  பாடல் 13
 
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

 
 
பொருள் :
 
'கண்ணன், தானே என்னிடம் வருவான்' என்ற எண்ணத்துடன் இருப்பவளை எழுப்பும் பாடல்.
 
தாமரைப் பூவையும், மானையும் போன்ற கண்களை உடையவளே! பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு நோற்பதற்காக, அதற்குண்டான இடத்திற்குப் போய்விட்டார்கள். சும்மா போகவில்லை.
 
பறவையின் வடிவாக வந்து தீங்கு செய்ய நினைத்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவனை, பொல்லாத அரக்கனை இராவணனைச் சுலபமாக 
 
அழித்தவனை; - புகழ்ந்து பாடிக்கொண்டுதான் நோன்பிற்கு உண்டான இடத்திற்குப் போனார்கள்.
 
சுக்கிரன் உதயமாகி, பிரகஸ்பதி அஸ்தமனமாகி விட்டது. பறவைகள்கூடக் கூட்டில் இருந்து வெளிப்பட்டு, கூவிக்கொண்டு போய்விட்டன.
 
இப்படிப்பட்ட நல்ல நாளன்று, உடம்பு குளிரும் படியாகத் துளைந்து விளையாடி நீராடாமல் படு‌க்கையில் கிடக்கின்றாயே? (கண்ணனைத் தனியாக நினைக்கின்ற) இந்தக் கள்ளத்தனத்தை விடு. எங்களுடன் இணை. எழுந்து வா.


இதில் மேலும் படிக்கவும் :