வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By ஸ்ரீ.ஸ்ரீ.
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (05:00 IST)

திருப்பாவை பாசுரம் பாடல் 12

திருப்பாவை பாசுரம் பாடல் 12
 
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


 
 
பொருள் :
 
கண்ணனை விட்டுப் பிரியாமல் இருக்கும் உத்தமச் செல்வனின் தங்கையை எழுப்புவதாக அமைந்த பாடல்.
 
பால் கறக்கும் நேரம் கடந்துவிட்டது. இன்னும் யாரும் கறக்கவில்லை. பால் கட்டிப் போன எருமை மாடுகள் எல்லாம், தங்கள் கன்றுகளை நினைத்துக் கனைத்துக்கொண்டு, இடைவிடாமல் தாமாகவே பாலைப் பொழிந்துவிட்டன. தரையில் விழுந்த அந்தப் பாலினால், தரை முழுவதும் சேறாக ஆகிவிட்டது. 
 
கண்ணனை விட்டுப் பிரியாத பக்தி கொண்டதனால், இப்படிப்பட்ட நல்ல செல்வத்தை உடையவனது தங்கையே! நாங்கள், உன் தலை வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். எங்கள் தலையில் பனி, வீழ்ந்து கொண்டிருக்கின்றது. (இருந்தும்) நாங்கள் எல்லோரும்; தர்மாவேசமான கோபத்தின் காரணமாக, இலங்கை அதிபனான இராவணனை அழித்தவனும், நினைப்பவர்களின் உள்ளங்களுக்கு இனிமையை அளிப்பவனும்-ஆன 
இராமனைப் பாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நீயோ, வாயே திறக்கமாட்டேன் என்கிறாயே. எப்படி, இப்படிப்பட்ட ஓயாத தூக்கத்தில் ஆழ்ந்தாய்? எல்லோரும் எழுந்து விட்டார்கள். இனிமேலாவது எழுந்திரு.
                                                                                                 
விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.