செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (18:30 IST)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: அக்டோபர் 2ஆம் தேதி சூரசம்ஹாரம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: அக்டோபர் 2ஆம் தேதி சூரசம்ஹாரம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகக் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
தசரா விரதம் தொடங்கிய பக்தர்கள், கடலில் நீராடி, கையில் காப்புக்கட்டி, பல்வேறு வேடங்கள் அணிந்து, கிராமங்கள் மற்றும் கடைவீதிகளில் அன்னையின் பெயரால் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
 
திருவிழாவின் முக்கிய நாளான அக்டோபர் 2-ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்குச் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரைக்குச் செல்வார்.
 
அப்போது, காளி வேடம் மற்றும் பிற சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள், "ஓம் காளி, ஜெய் காளி" என்று கோஷமிட்டு அம்மனைப் பின்தொடர்வார்கள்.
 
சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில், அம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நள்ளிரவு 1 மணிக்கு நடைபெறும்.
 
பக்தர்களின் வசதிக்காக, அக்டோபர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
சுகாதாரம், மின்சாரம், வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முகாமிட்டுள்ளனர்.
 
Edited by Mahendran