வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

மருத்துவத்தில் கலக்கும் சென்னை

webdunia photoWD
அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சைகளுக்காக நம்மூரில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்துக் கொண்டு வந்த காலம் போய், பல்வேறு நாடுகளில் இருந்து நம்மூருக்கு வந்து சிகிச்சை பெற்றுத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது சென்னையை அகில உலகமும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் மருத்துவர்களின் அரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கு முதலில் மருத்துவர்களுக்கு நமது கைதட்டல்களை வாழ்த்துக்களாக அளித்துவிட்டு தொடருவோம்.

சென்னையில் இயங்கி வரும் ஒரு சில குறிப்பிட்ட மருத்துவமனைகள் தினந்தோறும் தங்களது சாதனைப் பட்டியலை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை, நுண் துளை சிகிச்சை, பை பாஸ் அறுவை சிகிச்சைகளை தற்போது சாதாரணமாக செய்து வரும் மருத்துவர், இதய மாற்று அறுவை சிகிச்சையையே ஒரு சில மணி நேரங்களில் முடித்து, உறுப்பு தானம் பெற்றவரது உறவினர்களிடம் இருந்து கண்ணீர் வாழ்த்துக்களை அள்ளிச் செல்கின்றனர்.

விபத்தினாலோ, நோயினாலோ மூளை செயல் இழந்தவரது உடல் உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படும் நிலையில், அவர்களது உடல் உறுப்புகளை உறவினர்களது அனுமதியுடன் அகற்றி, உடல் உறுப்பு பாதிக்கப்பட்டு, மறுவாழ்விற்காக காத்திருக்கும் நோயாளிக்கு உடனடியாகப் பொறுத்துவது என்பது கடவுளின் வேலை என்றுதானே சொல்ல வேண்டும்.

webdunia photoWD
இதிலும், உறுப்புகளை தானம் கொடுக்க முன் வரும் உறவினர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளின் தானத்திற்குப் பிறகு, இந்தியாவில் உறுப்பு தானத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூற வேண்டியது அவசியம்.

இந்த உறுப்புகளை, தமிழகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகள் விமானம் மூலம் டெல்லிக்கும், பெங்களூருக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருக்கும் நோயாளிக்கு உடனடியாகப் பொறுத்துவது என்பது எல்லாம் இமாலய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

கண் தானத்திற்கும், ரத்த தானத்திற்கும் மாய்ந்து மாய்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில், இப்படி உறுப்பு தானம் என்பது சூரிய உதயத்தைப் போல தானாகவே உதித்து விட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

உடல் உறுப்புகளைப் பெற்றுக் கொண்ட மருத்துவர்கள் உடனடியாக அவற்றை நோயாளிகளுக்குப் பொறுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்றனர்.

இதயம், நுரையீரல், இதய வால்வுகள் என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நீண்டு கொண்டே செல்கிறது.

அண்டை அயல் நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து அறுவை சிகிச்சைகளை முடித்துக் கொண்டு நலமுடன் நாடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதற்கு காரணம், வெளிநாடு சென்று அல்லது நம்மூரில் மருத்துவம் பயின்று, தாய் நாட்டில் வாழும் மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய வேண்டும் என்று முனைப்புடன் சேவையாற்றும் இந்திய மருத்துவர்களை நாம் மனமார பாராட்டியே ஆக வேண்டும்.