செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 மே 2014 (06:33 IST)

பெரும் நஷ்டத்தில் சோனி நிறுவனம்

உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது.
 
நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன், மனிதர்கள் இசையை கேட்டு ரசிக்கும் போக்கையே மாற்றிய புரட்சியை ஏற்படுத்தியது.
 
எனினும் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற போட்டியாளர்களிடம் தமது சந்தைப் பங்கை சோனி கணிசமான அளவுக்கு இழந்துள்ளது.
 
தொலைக்காட்சி தயாரிப்பிலும் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ள சோனி, அதை லாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கும் பணிகளிலும் சிரமங்களை சந்திக்கிறது.
 
இந்த ஆண்டும் சோனி நஷ்டத்தையே எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில், அமெரிக்கத் தலைமையம் போன்ற பல சொத்துக்களை விற்பதற்கு அப்பாற்பட்டு, 5000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் சோனி திட்டமிட்டுள்ளது.