சமையல் எரிவாயு: அமைச்சரவைக் கூட்டம் திடீர் தள்ளிவைப்பு

Webdunia|
கார், இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு வருடத்திற்கு 4 முதல் 6 சமையல் எரிவாயு உருளைகளை மட்டுமே மானிய விலையில் அளிப்பது என்பது தொடர்பாக விவாதிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று கூட இருந்த மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக் கூட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.14 ஏற்றியதால் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோவம் தனிந்த பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்று கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய தி.மு.க. அமைச்சர் மு.க. அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோர், மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனது எதிர்ப்பை மு.க.அழகிரி தெரிவிக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வேளாண் அமைச்சர் சரத் யாதவ், எரிசக்தித் துறை அமைச்சர் சுசீல் குமார் ஷிண்டே, சாலை போக்குவரத்து அமைச்சர் சி.பி.ஜோஷி, எண்ணெய் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் அதிகாரமிக்க அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களாவர்.
சமையல் எரிவாயு உருளைகள் இப்போது மானிய விலையில் ரூ.395.35க்கு அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும், எனவே, சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு மானிய விலையில் ஒரு ஆண்டுக்கு 4 முதல் 6 உருளைகளை மட்டுமே வழங்குவது என்றும், மற்றவற்றை அவர்கள் முழு விலையான ரூ.666க்கு வாங்குமாறு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை உள்ளது.
சொந்த வீடு, வாகனங்கள் உள்ள வீடுகள் ஒரு ஆண்டுக்கு 20 முதல் 30 உருளைகள் வரை வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்று அரசு மதிப்பீடு செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :