கார்த்திகை தீபத்தன்று சொல்லவேண்டிய ஸ்லோகம்

தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். பன்னிரு தமிழ் மாதங்களுள்  ஒன்று கார்த்திகை, இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைதான் நாம் கார்த்திகை தீபமாகக்  கொண்டாடுகின்றோம். 
கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன்  நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை. மகாவிஷ்ணு,  பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி! கடும் தவம்  மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது  இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல  புராணம்.
 
கார்த்திகை தீபமான இன்று திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வர ஜோதி வடிவில் தன் பக்தர்களுக்கு காட்சி தந்து  அருள்பாலிக்கிறார். அனைவராலும் திருவண்ணாமலைக்கு சென்று ஜோதி வடிவான அண்ணாமலையாரை இன்று நேரில்  தரிசிக்க முடியவில்லை என்றாலும் வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் கீழே உள்ள ஸ்லோகத்தை கூறி அண்ணாமலையாரின்  அருளை பெறலாம்.
 
தீப வெண்பா:
 
“புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்
சித்திதரும் தீபம் சிவதீபம் – சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகைத் தீபம்”.
 
அருணாச்சல புராணத்தில் உள்ள சுலோகம்:
 
கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் அது பணிந்தோர், கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்தி வரம் கொடுப்போம்.
 
என்று அருணாச்சல புராணத்தில் சிவன் கூறி உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :