1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. வாய்ப்புகள்
Written By அ‌ய்யநாத‌ன்

நாராயண மூர்த்தியின் நல்ல ஆலோசனை!

FILE
தகவல் தொழில்நுட்பத்தில் (ஐடி) பட்டம் பெற்றால், நல்ல ஊதியத்தில் எங்கு வேண்டுமானாலும் செட்டில் ஆகி விடலாம் என்கிற இளையோரின் பார்வை ‘சரியான திட்டமல்’ என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறியுள்ளது சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆலோசனையாகும்.

அதிலும் குறிப்பாக, ஹெச் 1பி விசா பெற்றுக் கொண்டு அமெரிக்காவில் பணி பெற்று, பிறகு பச்சை அட்டை பெற்றுக்கொண்டு அந்நாட்டிலேயே செட்டில் ஆகி விடலாம் என்கிற கண்ணோட்டம் தவறானது என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய நாராயண மூர்த்தி, “தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி பெற்று இணைந்தால் அமெரிக்கா சென்று விடலாம் என்றும், ஹைச் 1 பி விசா பெற்று அங்கு போய், பிறகு பச்சை அட்டை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடலாம் என்று நமது இளையோர் நினைக்கின்றனர். இது ஒரு தவறான தீர்வென்றே நான் கருதுகிறேன், மிகத் தவறான வாழ்க்கைத் திட்டமும் கூட” என்று கூறியுள்ளார். அத்தோடு நிற்கவில்லை, உறுதியான எதிர்காலத்திற்கான வழியையும் காட்டியுள்ளார், அது முக்கியமானது.

“இளையோர் நல்ல பணியையும் ஊதியத்தையும் இந்தியாவிலேயே பெற வேண்டுமெனில் அவர்கள் அதற்கேற்ற நல்ல பணி வாய்ப்பைப் பெறவேண்டும். இதற்காக நீங்கள் அமெரிக்காவோ அல்லது வேறு ஒரு அயல் நாட்டிற்கோ செல்ல வேண்டும் என்று திட்டமிடக்கூடாது. இந்தியாவிலேயே சிறந்த பணியை பெற்று, இங்கேயே உறுதியாக வாழும் வாய்ப்புகள் உருவாகிவிட்டன. நாங்கள் உருவாக்கியுள்ள அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறந்த தொழில் நெறிஞர்களாக நீங்கள் உருவாக்கிக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சியில் உங்களுடைய எதிர்காலத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும், அதைத் தவிர்த்துவிட்டு நிரந்தரமற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்லக் கூடாது” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

FILE
மற்றொரு வகையிலும் நாராயண மூர்த்தி கூறியதை சீர்தூக்கிப் பார்ப்பது இளையோருக்குப் பயனளிக்கும். தங்களது நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையடுத்து உருவான வேலையின்மை பிரச்சனையை தீர்க்க, அயல் நாட்டுப் பணியாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதை தடுக்க நினைக்கிறது அமெரிக்கா. இந்த சிந்தனை ஒரு கொள்கை முடிவாக அந்நாட்டில் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அரசின் ஒப்பந்தப் பணிகளை அயல் வணிகப் பணிகளாக (Business process Out-sourcing) மற்ற நாடுகளுக்கு வழங்க ஒஹையோ மாகாண அரசு விதித்துள்ள தடையும், அமெரிக்க நிறுவனங்கள் அயல் நாடுகளில் அலுவலகம் அமைத்து பணிகளை நிறைவேற்றி பெற்றுவரும் வருவாய்க்கு அளித்துவரும் வரிச் சலுகையை நிறுத்திவிட்டு, அமெரிக்காவிலேயே பணி வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அந்த வரிச் சலுகையை அளிக்க விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசியிருப்பதும், அமெரிக்காவிற்கு பணியாற்ற வரும் தொழில் நெறிஞர்கள் பெற வேண்டிய ஹெச் 1பி, எல் 1, எல் 2 விசா கட்டணங்களை 2,000 முதல் 2,500 டாலர்கள் வரை உயர்த்தியுள்ளது ஆகியவற்றை பரிசீலிக்கும்போது, இதற்கு மேலும் அயல் நாட்டவருக்கு ஊதியப் பணிகளுக்கான ஒரு நாடாக அமெரிக்கா இருக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இந்த காரணங்களே நாராயண மூர்த்தி ‘நிரந்தரமற்ற எதிர்காலம்’ என்று கூறுவதற்கு அடிப்படையாகவும் இருக்கலாம்.

“நமது நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில் நெறிஞர்களை உருவாக்கக்கூடிய தரமான பள்ளிகளை, கல்லூரிகளை நிறுவ வேண்டும், இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, நம்மால் செய்யக் கூடியத” என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். நமது நாட்டு மத்திய மாநில அரசுகள் கல்வியை தொழில், வர்த்தகம் ஆகியவற்றை தனியார் மயம், உலக மயம் ஆக்கிவருவதைப் போல, கல்வியையும் தனியார் மயமாக்கி, இப்போது உலகமயமாக்கி வருகின்றன. எனவே தரமான பள்ளிகள், கல்லூரிகள் என்பதெல்லாம் நமது நாட்டில் ஒரு குறுகிய எதிர்காலத்தில் நடந்தேறக் கூடியதல்ல.

ஆனால், பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அணு சக்தி உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப அறிவியல் துறைகளில் உள்ள நிரந்தரமான எதிர்காலம் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இதனை கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது.

FILE
இந்தியா மூன்று கட்ட அணு ஆய்வுப் படிகளை வெற்றிகரமாகத் தாண்டி, இன்று நான்காவது படியில் வேகமான முன்னேற்றத்தை கண்டுவரும் நிலையில், அணு சக்தித் துறையில் மேம்பட்ட ஆய்விலும், இதர பணிகளிலும் இளையோருக்கு உள்ள எதிர்காலத்தை இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தின் இயக்குனராக உள்ள முனைவர் பல்தேவ் ராஜ் எடுத்துரைத்ததோடு நிற்காமல், இயற்பியல், வேதியியல் முது நிலை அறிவியல் மாணவ, மாணவியருக்கு தங்கள் ஆய்வுக் கூடங்களிலே குறுகிய கால அறிதல் பயிற்சி அளிக்க வகை செய்தார்.

FILE
அறிவியல் துறையில் உள்ள வாய்ப்புகள் பிரகாசமான, பெருமை தரக் கூடிய, நிரந்தரமான எதிர்காலத்தை உறுதி செய்யக் கூடியவை என்பது மட்டுமின்றி, நாட்டிற்கு மிகச் சரியான வகையில் சேவை செய்திடவும் வாய்ப்பு அளிக்கக் கூடியவை என்று சென்னை கிறித்துவப் பள்ளியில் இதற்கென்ற சென்னையின் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கில் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

அறிவியல் உலகிலுள்ள வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் விரிவாக விளக்கினார். மாணவ, மாணவியரும் பெரும் ஆர்வம் காட்டினர்.

எனவே, தகவல் தொழில் நுட்பத் துறையில் துவக்கத்திலேயே கிடைக்கும் அதிகமான மாத ஊதியத்தை மட்டும் ‘நம்பி’ எதிர்கால கனவுகளை வளர்த்துக் கொண்டு அந்தக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, தங்களின் ஆர்வத்திற்குத் தக்க படிப்பை தேர்வு செய்து மற்ற துறைகளுக்கும் பணியாற்றச் செல்ல மாணவர்கள் முற்படுவது, அவர்களின் வளர்ச்சியை மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

அயல் நாட்டில் பணியாற்றி, டாலர்களிலும், யூரோக்களிலும் வருவாய் பெற்று பிறந்த நாட்டிற்கு அனுப்பி, நாட்டை நிதி நிலை ரீதியாகச் செழிப்பாக்க முனைவதை விட, இந்நாட்டில் தங்கள் திறனைத் தந்து, தங்களுக்குப் பின்னால் வரும் இளையோருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

உலகின் பல முன்னேறிய நாடுகளில் இதுதான் அரை நூற்றாண்டுக் காலத்திற்கு நடைபெற்றது. இன்று அந்த நாடுகள் பல துறைகளில் வளர்ந்துள்ளன. இந்தியா மட்டும்தான் வளரும் நாடாக பொருளாதார அளவில் கருதப்பட்டாலும், ஒட்டு மொத்த மக்கள் நிலையை எடுத்துக் கொண்டால் பின்தங்கியுள்ள நாடுகளைப் போல் நொண்டியடித்துக் கொண்டிருப்பதை புலப்படுத்துகிறது.

இந்த நிலை மாற, அரசியல்வாதிகளின் ‘பொருளாதார சிந்தன’களைத் தாண்டி, நாட்டின் பாற்பட்டு இளையோர் சிந்தித்து செயல்பட வேண்டும்.