பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகியகால பயிற்சி!

சென்னை:| Webdunia|
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழில்நுட்ப பாடங்கள் நடத்துவதற்கு தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னை தரமணியில் இயங்கி வரும் உயர் கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் மோகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவதற்கு போதிய பயிற்சி அவசியமாகிறது. இன்றைய ஆசிரியர்களிடையே இந்த திறமையை மேம்படுத்துவதற்கு தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு வகையான பயிற்சிகளை ஒன்று முதல் மூன்று வார கணக்கில் நடத்தி வருகிறது. பாலிடெக்னிக் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்த குறுகிய கால பயிற்சிகள், கம்ப்யூட்டர் பயிற்சி, மென்பொருள் நிறுவனங்களில் சேர்வதற்கான சாப்ட்ஸ்கில், கம்யூனிகேசன் திறன், சுற்றுப்புற சுகாதார மேம்பாடு, புவியியல் தகவல் அமைப்பு மற்றும் மின்னணு தகவல் தொடர்பு என்ஜினிரிங் ஆகிய துறைகளிலும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
இதுதவிர இந்த நிறுவனத்தில் முதல் நிலை பட்டப்படிப்புகள் எம்டெக் (எச்ஆர்டி), எம்இஎட், ஆராய்ச்சிக்கான (பிஎச்டி) பொறியியல் கல்வி மேற்படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி மற்றும் படிப்புகள் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது தொழிற்சாலையில் பணிபுரிகின்ற பொறியாளர்களுக்கும் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குறுகிய கால பயிற்சிகள் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் மற்றும் பொறியியல் துறையில் இளநிலை கல்வி முடித்த மாணவர்களுக்கும் நடத்தப்படுகின்றன. விரைவில் பல்கலைக் கழக அந்தஸ்து பெறவுள்ள இந்நிறுவனம் மேலை நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுடன்/தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் பொறியியல் பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான பாடத்திட்டம் வகுக்கப்படுகின்றன. இங்கு மல்டி மீடியா, வீடியோ குறுந்தகடுகள், புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. சுமார் 300 வீடியோ படங்களில் குறுந்தகடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பொறியியல் துறை சார்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனத்தின் மற்றொரு வளாகம் திருச்சியில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தை தமிழக அரசு வழங்க முன்வந்துள்ள நிலையில் விரைவில் இந்த வளாகம் பயன்பாட்டுக்கு வரும் என மோகன் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :