சிபிஎஸ்இ உத‌வி‌த் தொகை: மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

Webdunia|
மத்திய செகன்டரி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) உயர்கல்வி உதவித் தொகையைப் பெற மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதி வாய்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தக் கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டிசம்பர் 2008-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவைக் காட்டிலும் குறைந்த அளவே மாணவர்கள் விண்ணப்பித்ததால், தற்போது மேலும் சிலருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதனால் மார்ச்-ஏப்ரல் 2008-ம் ஆண்டு சிபிஎஸ்இ நடத்திய தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை குறித்த விண்ணப்ப விவரங்கள், தகுதிகள் குறித்து cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :