காப்பீட்டு முகவர்களுக்கு இனி ஆன்-லைனில் தேர்வு: ஐ.ஆர்.டி.ஏ.

Webdunia| Last Modified புதன், 30 செப்டம்பர் 2009 (18:27 IST)
காப்பீட்டு திட்டங்களுக்கு முகவர்களை நியமனம் செய்வதற்கு இனி ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேர்ப்பது காப்பீட்டு முகவர்களின் பணியாக இருக்கிறது. ஆனால் யூலிப் (ULIP) போன்ற சில திட்டங்களின் சாதக, பாதகங்கள் குறித்து காப்பீடு எடுப்பவருக்கு முகவர்கள் முழுமையாக விளக்கமளிப்பதில்லை. இதனால் காப்பீடு எடுப்பவர் ஒருகட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்.
இதற்கு காரணம் முகவர்கள் நியமனத்தில் ஏற்படும் குளறுபடியே என்ற ரீதியிலான புகார்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (ஐ.ஆர்.டி.ஏ) வந்ததைத் தொடர்ந்து, முகவர்களுக்கான தேர்வை ஆன்-லைன் மூலம் நடத்த கடந்த 2007 ஆகஸ்ட் 17ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. இந்தமுறை 2008 ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு நடக்கும் சமயத்தில் ஏற்படும் தில்லு முல்லு காரணமாக திறமையற்றவர்கள் காப்பீட்டு முகவர்களாகி விடுகிறார்கள் என்றும், ஒரு சில தேர்வு மையங்களில் பணம் தர மறுக்கும் நபர்களின் விடைத்தாளை சம்பந்தப்பட்ட மைய அதிகாரிகள் மாற்றி விடுவதாகவும் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து ஆன்-லைனில் தேர்வு நடத்தும் முடிவை ஐ.ஆர்.டி.ஏ. எடுத்தது.
இந்நிலையில், காப்பீட்டு முகவர்களுக்கான ஆன்-லைன் தேர்வை நடத்துவதற்காக என்எஸ்இ.ஐடி (NSE.IT) என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. 10வது மற்றும் பிளஸ் 2 கல்வித் தகுதி உடைய முகவர்களைத் தேர்வு செய்வதற்காக என்எஸ்இ.ஐடி நிறுவனம் ஆன்-லைன் கேள்வித் தாள்களை உருவாக்கியுள்ளது.

என்எஸ்இ.ஐடி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆன்-லைன் தேர்வு எழுதுவதற்கான மையங்களை உருவாக்கியுள்ளது. இதனால் அந்த நகரம் மட்டுமின்றி அதன் 50 கி.மீ பரப்பளவில் உள்ளவர்களுக்கு அந்த மையங்கள் மூலம் பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி என்எஸ்இ.ஐடி நாடு முழுவதும் நிறுவியுள்ள 150 மையங்களில் ஆஃப்-லைன் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், விரைவில் இவை ஆன்-லைன் தேர்வு மையங்களாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :