எம்.டெக். உதவித்தொகை: எல் & டி அளிக்கிறது!

Webdunia|
சென்னை ஐஐடி-யில் கட்டுமானப் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, முன்னணி கட்டுமானத்துறை நிறுவனமான எல் & டி உதவித்தொகை வழங்குகிறது.

சென்னை மற்றும் டெல்லியில் உள்ள ஐஐடி-யில் எம்.டெக் (கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை) படிக்க விரும்புவோர், லார்சன் அன்ட் டூப்ரோவின் (எல் & டி) கட்டுமானப் பிரிவான இசிசி-யின் உதவித் தொகையைப் பெறலாம்.

தகுதிகள்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அமைப்பியல் (சிவில்), இயந்திரவியல், மின்னியல் பாடங்களில், வரும் 2009 தேர்வுகளில் 65 விழுக்காடு மதிப்பெண் பெறும் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது, 1.7.2009 தேதிப்படி 23-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் உயரம் 160 செ.மீ.யும், எடை 50 கிலோவாகவும் இருக்க வேண்டும். கண் கண்ணாடி அணிபவர் எனில் பார்வைத் திறன் + 5.0 புள்ளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எல் & டி உடன் இணைந்து சென்னை, டெல்லி ஐஐடி நடத்தும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். மருத்துவத் தகுதிகளைப் பொறுத்தே மாணவர்களின் தேர்வு இறுதி செய்யப்படும்.
இரண்டு ஆண்டு வகுப்புகளின்போது மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9,000 உதவித் தொகை வழங்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, நிபந்தனைகளுடன் கூடிய வேலைவாய்ப்பை எல் & டி வழங்கும். அப்போது அவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 2,95,000 வழங்கப்படும்.

உத்தரவாதத்தொகை: எல் & டி ஸ்பான்சர்ஷிபில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ரூ. 3,00,000 த்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். எல் & டி- யில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது பணி புரிய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கு 'எல்.என்.டி.இ.சி.சி.காம்' இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தன்னைப் பற்றிய முழு விவரங்கள், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றுடன் 10 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்கள் உறை மீது 'பார்வை எண்.: 999//STL/XXX' எனக் குறிப்பிட வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :